கடந்த 7 மாதமாக கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவி ஷஃபியா (23) உடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் வந்த பைக் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கணவர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில் அவரது மனைவி ஷஃபியாவுக்கு தலையில் அடிபட்டது. இதனால் அவர் சுயநினைவை இழந்தார். உடனடியாக அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பரிசோதனையில் ஷஃபியா, ஒன்றரை மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. தலைக்கவசம் அணியாததால் ஷஃபியாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆழ்ந்த கோமா நிலைக்கு அவர் சென்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு எப்போது நினைவு திரும்பும்? நினைவு திரும்புமா? என்பதை உறுதியாக செல்ல இயலாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே சமயத்தில் அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் தகவலையும் தெரிவித்தனர்.
இதையடுத்து சுய நினைவு இல்லாமல் இருக்கும் ஷஃபியாவின் வயிற்றில் வளரும் சிசுவை வளர்க்க கணவர் சம்மதம் தெரிவித்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தனி அறையில் ஷஃபியா பராமரிக்கப்பட்டு வந்தார். கடந்த 7 மாதங்களாக அவர் சுய நினைவு இல்லாமலேயே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தார். அதே சமயத்தில் வயிற்றில் இருந்த குழந்தையும் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தது. கருவின் வளர்ச்சியை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி ஷஃபியாவுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. சுய நினைவு இல்லாமலேயே அறுவை சிகிச்சை இன்றி குழந்தை பெற்றெடுத்ததை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். குழந்தை பெற்ற சமயத்தில் ஷஃபியாவின் கண்கள் திறந்தன என்றும் ஆனால் அவர் பேசவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஷஃபியாவுக்கு சுயநினைவு திரும்ப 10 முதல் 15 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளதாக நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் தீபக் குப்தா கூறுகிறார்.
இதையும் படிக்கலாமே: பரதநாட்டிய அசைவுகளை கேபி.கிட்டாப்பாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் – ஹேமமாலினிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM