Chennai Rains : கொட்டித் தீர்த்த மழை… 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – வெதர்மேன் கூறுவது என்ன?

Chennai Rains : வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (அக். 31) கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதையொட்டி, சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று (அக். 31) மாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. சேப்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர், கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், அசோக் நகர், கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், அண்ணா நகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நந்தனம், வேளச்சேரி, அடையாறு பகுதிகளில் சுமார் நான்கு மணிநேரத்திற்கும் மேலாக விடமால் மழை பெய்து வருகிறது.

சென்னையில் அதிகபட்சமாக திரு.வி.க நகரில் 5.4 செ.மீட்டரும், அண்ணா நகர் மலர் காலனியில் 4.9 செ.மீட்டரும், கொளத்தூரில் 3.1 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மேலும், இரவு 8 முதல் 9 மணிவரை சென்னை மாநகரில் சராசரியாக 1.7 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் (அக். 31 – இரவு 10 மணி நிலவரம்),”அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 3 மணி நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது நேற்று இரவு 10.30 மணியளவில் பேஸ்புக் பக்கத்தில்,”மேக அடுக்குகள் அடுத்து தீவிரமாக சென்னை நகரத்திற்குள் நகரும், மழையின் தீவிரம் அதிகரிக்கும். மழையின் தீவிரம் மிக அதிகமாக இருக்கும் என்பதால், தயவுசெய்து வீட்டிற்குள்ளேயே இருங்கள். சாலைகளில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்.

வடசென்னை மற்றும் வடமேற்கு சென்னை பல இடங்களில் ஏற்கனவே 100 மி.மீட்டர் நெருங்கியுள்ள நிலையில், பலத்த மழை பெய்து வருகிறது. நாளை மழை 200 மி.மீட்டரை நெருங்கவில்லை என்றால்தான் நான் ஆச்சரியப்படுவேன். இத்துடன் முடிவடையவில்லை, கடலில் மேலும் பல மேக அடுக்குகள் உருவாகி சென்னைக்கு நகர் நோக்கி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து, இன்று நள்ளிரவு 12 மணியளவில் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில்,”அடுத்த மேக அடுக்கு சென்னை நகரத்திற்கு நகர்கிறது. தென் சென்னையும் இதனால் மழை பெறும் என்று நம்புகிறேன். நீண்ட தூரத்தில் கடலில் இன்னும் ஒரு மேக அடுக்கு தென்படுகிறது”.

கனமழையை முன்னிட்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (நவ. 1) ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.