Indira Gandhi Death Anniversary : 'இந்தியாவை சிதைக்க விட மாட்டேன்' – ராகுல் காந்தி ட்வீட்

Indira Gandhi Death Anniversary : இந்தியாவின் ஒரே ஒரு பெண் பிரதமரும், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகளுமான இந்திரா காந்தி, 1984ஆம் ஆண்டு அக்.31ஆம் தேதி அவரின் இரு பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார். 

இந்நிலையில், அவரின் 38ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ள அவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்பட பலரும், டெல்லி இந்தியா காந்தியின் நினைவிடமான சக்தி ஸ்தலுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தற்போது, இந்தியா முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி ட்விட்டரில் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில்,”பாட்டி, உங்களின் அன்பையும், மதிப்பையும் எனது மனதில் சுமக்கிறேன். ஒருபோதும், எந்த இந்தியாவுக்காக உங்கள் உயிரை தியாகம் செய்தீர்களோ, அதை சிதைக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ட்விட்டரில் மல்லிகார்ஜுன கார்கே,”இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தில் அவருக்கு எனது அஞ்சலிகள். விவசாயம், பொருளாதாரம், ராணுவம் என அனைத்திலும், இந்தியாவை வலிமையான நாடாக மாற்றியதில் இந்திரா காந்தியின் பங்களிப்பு ஒப்பிட முடியாதது” என இந்தியில் பதிவிட்டுள்ளார். 

தொடர்ந்து, இந்திய தேசிய காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,”வங்கதேச விடுதலை, பசுமைப் புரட்சிக்கு வழிவகுத்தது, நாட்டின் கடினமான காலங்களிலும், சுமுகமான நேரங்களிலும் வழிநடத்தியது போன்ற பெருமைக்குரியவர் இந்திரா காந்தி” என பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திரா காந்தி 1966 – 1977ஆம் ஆண்டு வரையும் பின்னர், 1980 – 1984ஆம் ஆண்டு வரையும் பிரதமராக இருந்தார். இடையில் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், தோல்வியடைந்து மூன்று ஆண்டுகள் பதவியை இழந்தார். பின்னர், 1980ஆம் ஆண்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.