Morbi Bridge Collapse: குஜராத் தொங்கு பாலம் விபத்துக்கு இதுதான் காரணம் – தடயவியல் துறை தகவல்!

குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்துக்கு அதிக சுமையே காரணம் என, தடயவியல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில், பழமையான தொங்கு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தை கேபிள் தாங்குகிறது. அண்மையில் இந்தப் பாலம் புனரமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை இந்தப் பாலத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக தொங்கு பாலம் அறுந்து விழுந்தது. இதில் பாலத்தில் இருந்த பொது மக்கள் ஆற்றில் மூழ்கினர்.

இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட சுமார் 141 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்துக்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில், மாநில பேரிடர் மீட்புப் படையினர், தேசிய மீட்புப் படையினர், துணை ராணுவப் படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்துக்கு அதிக சுமையே காரணம் என, தடயவியல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கேஸ் கட்டர்களை பயன்படுத்தி சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம் பாலத்தில் ஏறியதால், எடை தாங்காமல், தொங்கு பாலம் அறுந்து விழுந்ததாக தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.