அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கணும்.. அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை..!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்த தேதியில் இருந்து அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதே தேதியில் இருந்து தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை.

ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அரசு ஊழியர்களின் நண்பன் என்று சொல்லிக் கொண்டு அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் செயலை மேற்கொண்டு வருகிறது.

தற்போது, 01-07-2022 முதல் மேலும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, அதாவது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்து ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், வழக்கம்போல் திமுக அரசு வாய்மூடி மவுனியாக உள்ளது.

எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, அதாவது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக 01-07-2022 முதல் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், தொடர்ந்து காலம் தாழ்த்தி வழங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.