தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக சஞ்சய் குமார் ஐபிஎஸ், ஆயுதப்படை ஐஜியாக ராதிகா ஐபிஎஸ், காவல்துறை நவீனப்படுத்தல் ஏடிஜிபியாக வெங்கட்ராமன் ஐபிஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறைத்துறை டிஜிபியாக இருந்த சுனில் குமார் ஓய்வு பெற்றதையடுத்து சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் புஜாரி ஐபிஎஸ்ஸும், சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஷகில் அக்தர் ஓய்வு பெற்றதையடுத்து சிபிசிஐடி ஏடிஜிபியாக அபய் குமார் சிங் ஐபிஎஸ்ஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். டிஜிபி அந்தஸ்தில் இருந்த இந்த இரு பதவிகளும் தற்போது ஏடிஜிபி அந்தஸ்துக்கு பணியிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், அபய் குமார் சிங் ஒரு சில மாதங்களில் டிஜிபி அந்தஸ்துக்கு பதவி உயர்த்தப்படவிருப்பதால் தற்போதைக்கு இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேசமயம், தமிழக ஆயுதப்படைப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபய் குமார் சிங், சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. 1992ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான அபய் குமார் சிங், பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். தமிழக காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். தென் மண்டல ஐ.ஜி., சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர், நெல்லை மாநகர காவல் ஆணையர், ராமநாதபுரத்தில் துணை ஐ.ஜி., மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அபய் குமார் சிங் பணியாற்றியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் கரூரில் உள்ள தமிழ்நாடு காகித நிறுவனத்தின் ஊழல் கண்காணிப்பு ஏடிஜிபியாக முக்கியத்துவமற்ற பதவியில் அபய் குமார் சிங் நியமிக்கப்பட்டார். பொன்மானிக்கவேல் ஐபிஎஸ் ஓய்வுபெற்றதையடுத்து, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டார். தற்போது, தமிழக ஆயுதப்படைப்பிரிவு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த அவரை, சிபிசிஐடி ஏடிஜிபியாக திமுக அரசு நியமித்துள்ளது.
அபய் குமார் சிங் ஏடிஜிபி அந்தஸ்தில் இருப்பவர். சிபிசிஐடி இயக்குநர் பதவி டிஜிபி அந்தஸ்தில் இருப்பவரே நியமிக்க முடியும் என்றாலும், அவருக்காக ஏடிஜிபி அந்தஸ்துக்கு அந்த பதவி பணியிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. சிபிசிஐடி இயக்குநர் பதவிக்கு அபய் குமார் சிங்குடன் ரேஸில் இருந்த மற்றொருவர் குற்றப்பிரிவு ஏடிஜிபியாக இருக்கும் மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் என்கிறார்கள். ஆனால், அவரை பின்னுக்கு தள்ளி சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் அபய் குமார் சிங்.
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால், திமுக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார். தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் கொடநாடு வழக்கு உள்ளிட்ட அதிமுக்கியமான வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், சிபிசிஐடி ஏடிஜிபியாக அபய் குமார் சிங் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.