நடிகைகள் குஷ்பு, நமீதா, காய்திரி ரகுராம் உள்ளிட்ட பாஜக மகளிரணி நிர்வாகிகள் குறித்து, அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக்கை கைது செய்யக் கோரியும், திமுகவை கண்டிக்கும் வகையிலும் பாஜக மகளிரணி சார்பில், இன்று மாலை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். இந்நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சில நாள்களுக்கு முன், இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை ஆர்.கே. நகரில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில், பங்கேற்று பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜக மகளிரணியில் உள்ள நடிகைகள் குறித்து அவதூறான கருத்தைகளை தெரிவித்தாக குற்றஞ்சாட்டப்பட்டது.
தொடர்ந்து, எழுந்த சர்ச்சையை அடுத்து, தான் பேசியது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது என்றும், இருப்பினும் தன் பேச்சால் யாரும் புண்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் சைதை சாதிக் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.