ஐதராபாத்: அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தாவுக்கு சிரஞ்சீவி மற்றும் தெலுங்கு பட உலகினர் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர். சமீபத்தில் யசோதா படத்துக்காக டப்பிங் பேசிய சமந்தா, டிரிப்ஸ் ஏற்றியபடி பேசினார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. அப்போது தனக்கு மயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் இருப்பதாக சமந்தா தெரிவித்தார். மயோசிடிஸ் பிரச்னை இருந்தால் தசைகளில் வலி இருக்கும். அடிக்கடி கீழே விழுவார்கள். நடந்தாலோ, நின்றாலோ மிகவும் சோர்வாக இருக்கும். நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தவறுதலாக ஆரோக்கியமான திசுக்களை தாக்குவதால் தான் பெரும்பாலும் மயோசிடிஸ் ஏற்படும்.
இதையடுத்து டிவிட்டரில் சமந்தாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார் சிரஞ்சீவி. அவர் கூறும்போது, ‘சமந்தா… நம் வாழ்க்கையில் அவ்வப்போது சவால்கள் வந்துகொண்டேயிருக்கும். அவை நம் மனவலிமையை கண்டறிவதற்காகக் கூட இருக்கலாம். மிகப்பெரிய மனவலிமை கொண்ட அற்புதமான பெண் நீங்கள்.
விரைவில் உங்களுக்கான இந்த சவாலையும் நீங்கள் முறியடிப்பீர்கள். தைரியமும், நம்பிக்கையும் கிடைக்க வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார். இதேபோல் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் தம்பியும் நடிகருமான அகில், ஜூனியர் என்டிஆர், ராம்சரண் உள்ளிட்டோரும் சமந்தாவுக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.