காஞ்சிபுரம் : ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரத்தில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். அந்த பகுதி தனியாருக்கு சொந்தமான பகுதியில் மக்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்களை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாரிகள் லட்சுமிபுரம் வரவிருப்பதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட மக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மழை நேரத்தில் குடியிருப்பு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டால் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், குறிப்பாக 50 ஆண்டுகளாக வசித்து வரும் எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பருவமழை தொடங்கிய நேரத்தில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவதனால் இதனை தடுத்து நிறுத்தவே லட்சுமிபுரத்தில் உள்ள மக்கள் கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாமல் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த போராட்டமானது சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த அங்கு வந்த போலீசார் அப்பகுதி மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.