“இன்னொரு சம்பவம் செஞ்சாதான் பயப்படுவாய்ங்க!" – கொலைக்கு முன்பு போலீஸூக்கே தகவல் கொடுத்த ரௌடி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் சின்னராசு (35). ஆட்டோ டிரைவரான இவர் மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட, 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவருக்கும் மண்ணச்சநல்லூர் காந்தி நகரைச் சேர்ந்த ரௌடி புல்லட் ராஜா (எ) நளராஜாவின் மனைவிக்கும் இடையே தொடர்பு உண்டாகி, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர். அந்த வகையில், கடந்த சனிக்கிழமையன்று சின்னராசுவும், அந்தப் பெண்ணும் சாமி கும்பிடுவதற்காக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்தனர். இருவரும் கோயில் முடி மண்டபம் அருகே நின்றிருந்தபோது, அந்தப் பெண்ணின் கணவர் புல்லட் ராஜா (எ) நளராஜா அங்கு வந்து, சின்னராசுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கத்தியால் சின்னராசுவை குத்திக் கொலைசெய்தார். இதில் சின்னராசு ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தச் சம்பவத்தால் சமயபுரம் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கொலையான சின்னராசு

சின்னராசுவை குத்திக் கொலைசெய்த புல்லட் ராஜா, கடந்த ஜனவரி மாதம்தான் அதே பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளரான சதீஷ்குமார் என்பவரைக் கொலைசெய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையிலிருந்து  ஜாமீனில் வெளிவந்த ஒருசில நாள்களிலேயே புல்லட் ராஜா, அடுத்ததொரு கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் 2016-2021 காலக்கட்டத்தில் திருச்சி மண்ணச்சநல்லூர் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்த அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பரமேஸ்வரி முருகனின் தம்பிதான் இந்த புல்லட் ராஜா. இந்தக் கொலைச் சம்பவத்தையடுத்து புல்லட் ராஜா, அவருக்கு உதவிய ஷேக் அப்துல்லா, அப்துல் கனி ஆகிய 3 பேரையும் போலீஸார் கைதுசெய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்திருக்கின்றனர்.

புல்லட் ராஜா

கொலைக்கான காரணம் குறித்து விஷயமறிந்த போலீஸார் சிலரிடம் பேசினோம். “கொலை வழக்கில் புல்லட் ராஜா சிறைக்குச் சென்றதிலிருந்து, அவர் மனைவிக்கும் சின்னராசுவுக்கும் இடையே தொடர்பு உண்டாகியிருக்கிறது. புல்லட் ராஜாவைச் சந்திக்க ராஜாவின் மனைவி சிறைக்கு போகும் போதெல்லாம், சின்னராசுவே அவரது ஆட்டோவில் அழைத்துச் சென்றிருக்கிறார். இருவரது தொடர்பு தெரிந்து புல்லட் ராஜாவைச் சந்திக்க சிறைக்குச் சென்றவர்கள், ‘நீ வெளிய வர மாட்டன்னு நினைச்சு, உன் பொண்டாட்டியும் சின்னராசுவும் ஒன்னா சேர்ந்து சுத்திக்கிட்டு இருக்காங்க!’ என்றிருக்கின்றனர். அதையடுத்து ஜாமீனில் வெளிய வந்த புல்லட் ராஜா தன்னுடைய மனைவியையும், சின்னராசுவையும் கண்டித்திருக்கிறார். இருந்தும் இருவரும் அதனை பொருட்படுத்தாமல், அடிக்கடி ஒன்றாகச் சுற்றியிருக்கின்றனர். அதையடுத்து நேரம் பார்த்து காத்திருந்த புல்லட் ராஜா, பிளாட்பாரக் கடையில் வாங்கிய 100 ரூபாய் கத்தியை வைத்து சின்னராசுவை கொன்று வீசியிருக்கிறார்.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், கொலை நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு மண்ணச்சநல்லூரில் போலீஸ் ஒருவரைச் சந்தித்த புல்லட் ராஜா, ‘நாம திருந்தலாம்னு நினைச்சாலும் விட மாட்டேங்குறாய்ங்க சார். திரும்ப ஒரு சம்பவம் செஞ்சாதான் நம்மளைப் பார்த்து பயப்படுவாய்ங்க போல!’ என்றிருக்கிறார். ஆனால், அந்த போலீஸோ, புல்லட் ராஜா ஏதோ போதையில் உளறுவதாக நினைத்து அசால்ட்டாக அதனை பொருட்படுத்தாமல் விட்டிருக்கிறார்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.