ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அருகே நசியனூர் ராயப்பாளையம் ரோடு நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் மங்கையர்கரசிக்கு திருமணமாகி மொடக்குறிச்சியில் வசித்து வருகிறார். இவரது 2-வது மகள் பிருந்தா வெட்டுக்காட்டு வலசை பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவரை காதலித்து கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து, தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில், கடந்த தீபாவளி அன்று பிருந்தாவின் பெற்றோர் மொடக்குறிச்சியில் உள்ள தனது மூத்த மகள் வீட்டுக்கு சென்றனர். அவரது கணவர் கார்த்தியும் வேலை விசயமாக திண்டுக்கல் சென்று விட்டார்.
இதனால், பிருந்தா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதற்கிடையே பிருந்தாவின் தாய் தினமும் தனது மகளிடம் செல்போனில் பேசி வந்தார். கடைசியாக கடந்த 27-ந் தேதி இரவு 10 மணி அளவில் தாய் வளர்மதி தனது மகள் பிருந்தாவிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
இதையடுத்து மறுநாள் காலை (28-ந் தேதி) வெகுநேரம் ஆகியும் பிருந்தாவின் நடமாட்டம் இல்லாததனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டு பெண் ஒருவர் பிருந்தாவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது பிருந்தா இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பிருந்தாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
இந்த தகவல் அறிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர் பிருந்தாவின் உடலைப்பார்த்து கதறி அழுதனர். மேலும் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பிருந்தாவின் தாய் வளர்மதி சித்தோடு போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வந்த போலீசார் தற்கொலை என்று வழக்கு பதிவு செய்து பிருந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த இறப்பின் காரணம் குறித்து அறிய போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்தபோது, பிரேத பரிசோதனை அறிக்கையில் பிருந்தா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீசார் தற்கொலை என்று பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணையை தொடங்கினர். சித்தோடு தலைமைகாவலர் முருகையா, துணை தலைமை காவலர் பாபு செந்தில் குமார் ஆகியோரைக் கொண்ட தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டதில், அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் சில பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் முதலில் கார்த்தியை காதலித்து வந்தார். அதேநேரத்தில் பிருந்தாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு அவரது உறவினரான, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் அரவிந்த் என்பவர் அடிக்கடி வந்துள்ளார். இதனால் அரவிந்துடனும் பிருந்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறி உள்ளது.
இதனால், பிருந்தா ஒரே நேரத்தில் இருவரையும் காதலித்து வந்துள்ளார். இதில் கார்த்தி பிருந்தாவை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த அரவிந்த் அதிர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிருந்தா வீட்டிற்கு அரவிந்த் வந்து, இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அரவிந்த் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் வா என்று பிருந்தாவை அழைத்துள்ளார். அதற்கு பிருந்தா தான் நான்கு மாத கரிப்பினியாக உள்ளதனால் உன்னுடன் வர முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், கோபமடைந்த அரவிந்த் என்னுடன் வரவில்லை என்றால் நாம் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். அதற்கு பிருந்தா என்னால் முடியாது நீ வேண்டுமானால் என்னை கொலை செய்து விட்டு நீயும் தற்கொலை செய்து கொள் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, அரவிந்த் பிருந்தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு சென்னைக்கு தப்பி ஓடி, அங்கு உள்ள ஒரு பிரபல ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
இதைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று ஓட்டலில் வேலை செய்த அரவிந்தை கைது செய்து ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். அதன் பின்னர் போலீசார் அவரை ஈரோடு உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.