உலகமே வியந்து பார்க்கும் வகையில் இந்தியா சாதனையை நிகழ்த்தி வருகிறது: ராக்கேஷ் ஷர்மா

நவீன தொழில் நுட்ப விரிவாக்கத்தில் இந்தியா உள்ளது என்றும் உலகமே வியந்து பார்க்கும்  வகையில் மிகப்பெரிய சாதனையை இந்தியா நிகழ்த்தி வருவதாகவும் விண்வெளி சென்ற முதல் இந்தியரான ராக்கேஷ் ஷர்மா குன்னூரில் பேட்டி அளித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தேசிய மாணவர் படை சார்பில் அகில இந்திய அளவிலான தேசிய மாணவர் படை மாணவிகள் மலையேற்ற பயிற்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் காரணமாக மலையேற்ற பயிற்சி நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மலையேற்ற பயிற்சி முகாம் குன்னூர் வெலிங்டன் ஹவாய் ஹில் பகுதியில் நடைபெற்று வருகிறது. முகாமில் இன்று தலைமை வகித்த, விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியரான ராகேஷ் சர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மாணவர்கள் மத்தியில் அவர் பேசுகையில், “கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவம் சிறப்பாகவும் பொறுப்புடனும் செயல்பட்டு வருகிறது. ராணுவ பணியில் இருந்தாலும், பணி முடித்து வெளியே வந்தாலும் அதற்கு மரியாதை என்றும் உள்ளது.  

சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களையே சாதித்தவர்களாக மீடியா காண்பிக்கிறது. அதை பார்த்து ஏழை, நடுத்தரமாக உள்ளவர்கள் சாதிக்க முடியாது என நினைக்க கூடாது. தங்களாலும் முடியும் என்ற முயற்சி மிக அவசியம்.” என்று கூறினார்.

தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “மேற்கத்திய நாடுகளில் இருந்து  எதிர்பார்த்த தொழில்நுட்பம் நமக்கு கிடைக்காமல் இருந்தது. தற்போதைய நவீன தொழில் நுட்ப விரிவாக்கத்தில் இந்தியா உள்ளது. 

rakesh sharma

உலகமே வியந்து பார்க்கும்  வகையில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி வருகிறது. வருங்காலத்தில் தனியார் பங்களிப்பு இருக்கும் பட்சத்தில் விண்வெளி சாதனைக்கு மேலும் உதவிகரமாக இருக்கும்” என தெரிவித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.