சென்னை: உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் 12,525 கிராமங்களில் கிராமசபை கூட்டமும், நகர்ப்புற உள்ளாட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டமும் இன்று நடைபெறுகிறது. சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் நடக்கும் பகுதி சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பொதுமக்களிடம் குறைகளை கேட்கிறார். தமிழகத்தில் உள்ள 12,525 கிரா மங்களிலும் குடியரசு தினம் (ஜன.26), மே தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக.15), காந்தி ஜெயந்தி (அக்.2) ஆகிய நாட்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், நவ.1-ம் தேதி உள்ளாட்சி தினத்தன்றும் கிராமசபை கூட்டத்தை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
வேளாண் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அலுவலர்களும் இதில் பங்கேற்கின்றனர். இதற்கிடையில், கிராமசபை கூட்டம்போல, நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் வார்டு தோறும், அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் வார்டு கமிட்டி அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பங்களிப்புடன் பகுதி சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் முதன்முதலாக பகுதி சபை கூட்டம் இன்று நடைபெறுகிறது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் 6-வது வார்டில் நடை பெறும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பகுதி சபை கூட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
வார்டு மக்களின் குறைகளை கேட்டு, அதற்கு தீர்வு காணும் நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளார். இதேபோல, உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் வார்டுகளில் பகுதி சபை கூட்டங்களில் பங்கேற்கின்றனர். கிராமசபை கூட்டம்போலவே, பகுதி சபை கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அனுப்பப்படும். இதில் குடிநீர் விநியோகம், குடிநீர் குழாய் இணைப்பு, கழிவு அகற்றம், கட்டிடம் கட்டுதல், விதிமீறல் குறித்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம்.