வெள்ளித்திரையைத்தாண்டி, நாட்டில் வெளிப்படையான அரசியல் கருத்துகளால் அவ்வப்போது வெளிச்சத்துக்கு வரும் சினிமாத்துறையினரில் குறிப்பிடத்தக்கவர் இந்தி நடிகை கங்கனா ரணாவத். கடந்த சில மாதங்களாக இவரின் கருத்துகள் பா.ஜ.க-வை ஆதரிப்பதுபோல இருப்பதாக அரசியல் அரங்கில் பரவலாகப் பேசப்பட்டது. மேலும், விரைவில் கங்கனா ரணாவத் அரசியலில் குதிக்கப்போகிறார் எனப் பேச்சுக்களும் அடிபட்டன.

அந்த வரிசையில் முன்னதாக அரசியலுக்கு வரும் திட்டம் எதுவும் இல்லை எனக் கூறிவந்த கங்கனா ரணாவத், “அனைத்து வகையான பங்கேற்புக்கும் நான் வெளிப்படையாக இருப்பேன். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ளவர்கள் எனக்கு சேவை செய்ய வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்” எனக் கடந்தவாரம் கூறியிருந்தார். இதனால், கங்கனா ரணாவத் கூடிய சீக்கிரம் பா.ஜ.க-வில் சேரப்போகிறார் எனப் பேச்சுக்கள் கிளம்பின.

இந்த நிலையில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதற்கு விளக்கமளித்திருக்கிறார். இது குறித்து ஊடகத்திடம் பேசிய ஜே.பி.நட்டா, “கங்கனா ரணாவத் கட்சியில் சேர்வது வரவேற்கத்தக்கதுதான். அதேசமயம், தேர்தலில் போட்டியிடுவதென்பது அவரின் தனிப்பட்ட முடிவல்ல. அதற்கு அடிமட்டத்திலிருந்து தேர்தல் குழு, நாடாளுமன்ற வாரியம் வரை ஆலோசனைச் செயல்முறை இருக்கிறது” எனக் கூறினார்.