மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக தனி விமானத்தில் பெங்களூரு சென்றார் நடிகர் ரஜினி காந்த்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருடைய திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
புனித் ராஜ்குமார் மறைவையடுத்து, திரையுலகில் அவருடைய கலைப்பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு மிக உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார்.
அத்துடன், கன்னட ராஜ்யோத்சவா தினமான நவம்பர் 1-ம் தேதி (இன்று) மாலை நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு அந்த விருதை வழங்க, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த விருதை வழங்குவதற்காக நடிகர் ரஜினி காந்த் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு சென்றடைந்தார். அங்கு, கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் ரஜினி காந்தை வரவேற்றார்.