கன்னட சினிமாவில் சாதனை படைத்த கேஜிஎப் படத்தை சமீபத்தில் வெளியான காந்தாரா படம் முறியடித்து இருக்கிறது, காந்தாரா படத்திற்கு தமிழ் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்திருக்கும் இந்த படத்தை ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அச்சுத் குமார், சப்தமி கவுடா, கிஷோர், தீபக் ராஜ், பிரமோத் ஷெட்டி, மானசி சுதிர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இயற்கைக்கும், மனிதர்களுக்கும் உள்ள பிணைப்பை பற்றியும், குலதெய்வம் மற்றும் காவல் தெய்வங்களின் சிறப்புக்களை பற்றியும் கூறும் விதமாக இந்த படம் அமைந்துள்ளது. படத்தின் க்ளைமேக்சில் ஹீரோ சாமி வந்து ஆடும் காட்சிகள் மெய்சிலிர்க்க செய்யும் வகையில் அமைந்திருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நன்கு வெற்றி பெற்று இருக்கிறது.
‘காந்தாரா’ படத்திற்கு பல தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுக்கள் வந்து குவிந்துகொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட ரிஷப் ஷெட்டியை அழைத்து சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியதற்கும், சிறந்த படத்தை கொடுத்ததற்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். இந்த படத்திற்கு ஐஎம்டிபி 9.8/10 மதிப்பெண் வழங்கி சிறப்பித்துள்ளது. ‘காந்தாரா’ படத்தை திரையரங்கில் கண்டு ரசித்த ரசிகர்கள் இப்படத்தை எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 30ம் தேதி வெளியான ‘காந்தாரா’ படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நவம்பர்-4ம் தேதியன்று வெளியாகிறது, இந்த படம் ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் கிடைக்கும். ரூ.16 பட்ஜெட் தொகையில் உருவாக்கப்பட்ட இந்த படம் இதுவரையில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.