டெல்லி: குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 பேர் பலியான துக்கம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மோர்பி நகரில் சமீபத்தில் சீரமைக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம், கடந்த 30ம் தேதி திடீரென அறுந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 135 பேர் நீரில் மூழ்கியும், இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர். இதில் 47 பேர் குழந்தைகள் ஆவர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புனரமைக்கப்பட்ட ஐந்தே நாட்களில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 பேரின் உயிர்களை பழிவாங்கி இருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
3வது நாளாக மச்சு ஆற்றில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. கடற்படை, கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் ரப்பர் படகுகளில் ஆற்றின் நீரோட்ட பகுதிகள் மற்றும் பாறை இடுக்குகளில் தீவிரமாக தேடிவருகின்றனர். நீர் மூழ்கி வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தொங்கு பாலம் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள குஜராத் காவல் துறை இதுவரை 9 பேரை கைது செய்துள்ளது. சுமார் 4 ஆதி அகலம், 765 அடி நீளம் கொண்ட தொங்கும் பாலம் அறுந்து விழுந்ததை அடுத்து அதனை புனரமைத்த பிரிவின் மீது கடும் நடவடிக்கை எடுக்க அழுத்தம் அதிகரித்து வருகிறது.
படுகாயம் அடைந்தவர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில், குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து குறித்த வழக்கை வரும் 14ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பழமைவாய்ந்த பொதுக்கட்டமைப்புகளில் பாதுகாப்பு தணிக்கை நடத்தவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குஜராத் தொங்கு பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்து விதமாக நாளை மாநிலம் முழுவதும் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது.