புதுடெல்லி,
குஜராத் மாநிலத்தில் மோர்பி பாலம் இடிந்து விழுந்தது குறித்து ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் ஒரு நீதித்துறை ஆணையம் அமைத்து, மோர்பி பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
சுற்றுச்சூழல் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பழைய மற்றும் ஆபத்தான பாலங்கள், நினைவுச் சின்னங்களை ஆய்வு மற்றும் இடர் மதிப்பீடு செய்வதற்கான குழுவை மாநில அரசுகள் அமைக்க வேண்டும்.
நாடு முழுவதும் பொது கட்டமைப்புகளில் பாதுகாப்பை உறுதிசெய்து தணிக்கை நடத்தவும் வேண்டும். இது போன்ற துயர சமபவங்களை உடனடியாக கவனிக்க, மாநிலங்களில் நிரந்தர பேரிடர் ஆய்வுக் குழுவும் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு வரும் 14-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.