தென்காசி மாவட்டத்தில் குறி சொல்வதாகக் கூறி மோசடி செய்த வாலிபரை பெண்கள் பொறிவைத்து பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சத்தியபாமா. இந்நிலையில் சத்தியபாமா சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்த பாலமுருகன் என்ற வாலிபர் ஒருவர் குறி சொல்வதாக கூறி அந்தப் பகுதிக்கு வந்துள்ளார்.
அப்போது சத்தியபாமா அவரிடம் குறி கேட்டுள்ளார். இதில் உன் கணவர் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறி ரூ.2870-யையும், ஒரு ஜோடி கொலுசையும் வாங்கிக் கொண்டுள்ளார்.
இதையடுத்து அந்த வாலிபர் வைத்திருந்த செம்பில் இருந்து ஒரு தகடு எடுத்து கொடுத்து உன் பிரச்சினை இதோடு முடிந்து விட்டதாகவும், மாலை 6 மணிக்கு தனக்கு போன் செய்தால் மேலும் விவரங்களை சொல்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு சத்தியபாமா போன் செய்தபோது பாலமுருகன் போன் எடுக்கவில்லை. இது குறித்து தனது தோழி பேபியிடம் சத்தியபாமா தெரிவித்துள்ளார். இதையடுத்து இவர்களுடைய உறவினர் ஒருவர் நம்பர் மூலம் அந்த வாலிபரை தொடர்பு கொண்டு பரிகாரம் செய்ய வேண்டுமென அழைத்துள்ளனர்.
இதை நம்பி அந்த வாலிபர் சங்கரன்கோவில் கோவில்வாசல் அருகே வந்தபோது இருவரும் அவரை மடக்கி பிடித்து சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.