சென்னை: பாஜக பெண் நிர்வாகிகள் நடிகை குஷ்பு, நடிகை நமீதா ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆர்.கே.நகர் மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய, திமுக பேச்சாளரும், சென்னை தெற்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளருமான சைதை சாதிக், பாஜக பெண் நிர்வாகிகளான நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம் மற்றும் கவுதமி குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளானது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், சைதை சாதிக்கை, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் நதியா சீனிவாசன், கோமதி கணேசன் உள்ளிட்டோர் சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 29-ம் தேதி புகார் அளித்தார்.
இந்தப் புகார் குறித்து விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க சைபர் குற்றப் பிரிவுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீஸார், சைதை சாதிக் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.