கம்பம்: கேரள அரசின் டிஜிட்டல் ரீ சர்வே முறையினால் தமிழக வன நிலங்கள் பறிபோகும் நிலை ஏற்படுவதைக் கண்டித்து கம்பத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்ட ம் நடைபெற்றது.
கம்பம் வஉசி திடல் அருகே இன்று நடைபெற்ற போராட்டத்திற்கு சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமை வகித்தார். தலைவர் பொன்காட்சி கண்ணன், செயலாளர் மகேந்திரன், அவை முன்னவர் சலேத் மற்றும் பொருளாளர் ராதாகணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ‘கேரள அரசால் டிஜிட்டல் ரீ சர்வே முறை திட்டமிட்டு நடத்தப்படுகிறது. இதனால் தமிழகத்தின் எல்லையார மாவட்டங்களில் உள்ள தமிழக வன நிலங்கள் வெகுவாய் பறிபோகும் அபாயம் உள்ளது.
ஏற்கெனவே 1956-ம் ஆண்டு மொழிவழி பிரிவினையின்போது, 1,400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கேரளாவிடம் தமிழகம் இழந்துள்ளது. இந்நிலையில், டிஜிட்டல் ரீ சர்வே முறையால் தமிழக நிலங்களை அதிகளவில் இழக்க நேரிடும். ஆகவே அதிகாரிகள் குழுவை கேரளாவுக்கு அனுப்பி சர்வேயை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் சிதம்பரம், ரவீந்திரன், ஈசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.