கோவை: கோவை சம்பவம் தீவிரவாத தாக்குதல் என தமிழக காவல்துறையினர் ஏன் குறிப்பிடவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோயிலில் அண்ணாமலை நேற்று தரிசனம் செய்தார். பின்னர், பாஜக சார்பில் கோயிலில் நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் கந்தசஷ்டி கவசத்தை அவர் வாசித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் பெரும் நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. துணை தாக்குதல் எதுவும் நடைபெறாத வகையில் கோவை காவல் துறையினர் உயிரை பணயம் வைத்து பணி செய்துள்ளனர். எனவே கோவை மாநகர காவல் துறையினருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
சதிகாரர்கள் மதத்தால் பிளவுபடுத்த முயற்சித்தாலும்கூட கோவை மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். 23-ம் தேதி நடந்த சம்பவத்துக்குப் பிறகு இங்குள்ள இஸ்லாமிய பெருமக்கள், மதகுருமார்கள் நல்ல கருத்துகளை முன்வைத்துள்ளனர். எல்லா மதத்திலும் நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கிறார்கள். சிலர் தவறு செய்தார்கள் என்பதற்காக இஸ்லாமியர்கள் மீது குற்றம்சாட்டமாட்டோம். என்ஐஏ விசாரணை மட்டுமே நடத்துவார்கள். மத்திய உளவுப் பிரிவு என்ன தகவல்களை கொடுத்தாலும், கள அளவில் செயல்படுத்த வேண்டியது காவல்துறைதான். மாநில அரசிடம் நாங்கள் வைத்துள்ள கேள்விகள் எல்லாம், மாநில அரசு நன்றாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே தவிர, மாநில அரசை குறை காண்பிக்கவோ, மாநில அரசுக்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல.
தகவல் பரிமாற்றத்தில்.. காவல்துறை தங்களுக்குள்ளான தகவல் பரிமாற்றத்தின்போது தற்கொலை படைத்தாக்குதல் என்ற வார்த்தையை பயன்படுத்தும்போது, இன்னும் இதனை சிலிண்டர் வெடித்தது என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இது தீவிரவாத தாக்குதல் என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்தாமல் உள்ளனர்.
ஒற்றை ஓநாய் தாக்குதல்: ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது தவறான ஐடியாலஜி என இஸ்லாமிய மதத்தில் உள்ள குருமார்களே சொல்கிறார்கள். விரைவில் இஸ்லாமிய குருமார்களையும் சந்திக்க உள்ளேன். காவல்துறையில் சில கவனக்குறைவு நடந்துள்ளது. உளவுப் பிரிவு சிலரை கண்காணிக்கும் பணியை தவற விட்டுவிட்டார்கள். காவல்துறையில் பணிச்சுமை உள்ளது. ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறது. மத்திய அரசு ஏற்கெனவே ஒற்றை ஓநாய் தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. காவல்துறை எப்போதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு போய்விடக்கூடாது. கோவை சம்பவத்தை வைத்து பாஜக அரசியல் செய்யவோ அல்லது பலனடையவோ விரும்பாது. எங்களைபொருத்தவரை ஒரு கட்சியை பிரித்து, அதன் வலிமையை குறைத்து ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
தமிழகத்துக்கு ஒரு பலமான அதிமுக தேவை. அதிமுக கட்சி உள்விவகாரங்கள் குறித்து கருத்து சொல்ல எனக்கு உரிமை இல்லை. பத்திரிகையாளர்களை பார்த்து குரங்கு என்று சொல்லவில்லை. பத்திரிக்கையாளர்களை பார்த்து, குரங்கு போல் தாவித்தாவி வந்து என்னை பேசவிடாமல் பேட்டி எடுக்கிறீர்கள்? என்று தான் நான் கூறிறேன். இரண்டும் வேறு வேறு. நான் தவறு செய்யவில்லை. எனவே, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் தவறு செய்தேன் என்று நீங்கள் நினைத்தால் என்னை பத்திரிகையாளர்கள் புறக்கணித்துக் கொள்ளலாம். அதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது. உள்நோக்கத்துடன் சில பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.