பெய்ஜிங்: சீனாவில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஐபோன் ஆலையிலிருந்து புலம்பெயர் பணியாளர்கள் தப்பிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதுகுறித்து சீனாவில் உள்ள பிபிசி செய்தியாளர் ஸ்டீபன் மெக்டொனல் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
சீனாவில் செங்ஸு நகரில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குதான் ஆப்பிளின் ஐபோன் தயாரிக்கும் பாக்ஸ்கானின் பெரிய ஆலை அமைந்துள்ளது.
அந்த ஆலையில் பணிபுரிந்த ஏராளமானோர் கரோனா கட்டுப்பாடுகளுக்கு அஞ்சி வேலியைத் தாண்டி குதித்து தப்பியோடினர். இதில் பெண்களும் அடங்குவர். கரோனா பொதுமுடக்கம் காரணமாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து, பாக்ஸ்கான் தொழிலாளர்கள் 100 கி.மீ.க்கும் அப்பால் இருக்கும் தங்களது சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக செல்லத் தொடங்கியுள்ளனர். உலகின் மொத்த ஐபோன் உற்பத்தியில் 50 சதவீதம் செங்ஸுவில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில்தான் தயாரிக்கப்படுகிறது. இங்கு சுமார் 3,00,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அதில், பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவலல்கள் தெரிவிக்கின்றன. இதனால், உயிருக்கு பயந்து பலர் ஆலையிலிருந்து வெளியேறுவதற்கு ஆபத்தான முறையில் வேலியை கடந்து செல்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு வெளியேறுபவர்கள் சாலைகளிலும், வயல்வெளிகளிலும், மலைகளிலும் தஞ்சமடைந்து மெதுவாக ஊரை நோக்கி செல்வதை வீடியோ பதிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
ஃபாக்ஸ்கானிலிருந்து வெளியேறி வரும் தொழிலாளர்களுக்கு உதவ நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள உள்ளூர்வாசிகள் இலவச விநியோக நிலையங்களை அமைத்திருப்பதையும் அந்த வீடியோ பதிவுகள் காட்டுகின்றன.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், அரசு அல்லது பாக்ஸ்கான் உதவியை அவர்கள் எதிர்பார்க்க முடியாது. அருகில் உள்ள பொதுமக்களின் கனிவான கருணையை மட்டுமே அவர்கள் நம்ப முடியும்.
இருப்பினும், பாக்ஸ்கான் ஆலையில் எத்தனை தொழிலாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த உறுதியான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இவ்வாறு பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஹெனான் மாகாண தலைநகரான செங்ஸுவில் கடந்த ஏழு நாள்களில் மட்டும் கரோனா பாதிப்பு 97-லிருந்து 167-ஆக உயர்ந்துள்ளது. கரோனாவை முற்றிலும் ஒழிக்க சீன அரசு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையால் ஒரு கோடி மக்கள் தொகையை கொண்ட அந்த நகரம் பகுதியளவு பொது முடக்கத்துக்கு உள்ளாகியுள்ளது.