திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நடப்பு ஆண்டு ஐப்பசி திருவிழாவின் ஒருபகுதியாக சுந்தரவிலாசம் அரண்மனைப் பகுதியில் நேற்று பரிவேட்டை நிகழ்வு நடந்தது. தொடர்ந்து திருவிழாவின் மைய நிகழ்வான ஆராட்டு நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது.
இதற்காக கிழக்கே கோட்டையில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பத்மநாப சுவாமி, நரசிங்க மூர்த்தி, கிருஷ்ணன் விக்கிரக வாகனங்கள் ஆராட்டு ஊர்வலமாக கிளம்பும்.
இந்நிலையில், விமான நிலையத்தின் ஓடுதளம் வழியாக செல்லும் ஆராட்டு ஊர்வலத்திற்கு வசதியாக இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்படுகிறது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:
இந்த விமான நிலையம் 1932-ல் ஊர்வலப் பாதையின் குறுக்கே அமைந்தது. அப்போது முதலே ஊர்வலத்துக்கு வசதியாக, ஊர்வல நேரத்தில் விமான ஓடு தளத்தை மூடி வருகிறோம். அதிலும் ஊர்வலம் எங்கள் ரன் வே வழியாக வரும் போது இரு புறமும் விமான நிலையம் சார்பில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் நின்று பாதுகாப்பு தருவார்கள்.
ஆராட்டு ஊர்வலத்தில் திருவிதாங்கூர் ராஜவம்சத்தின் தற்போதைய தலைவர் ஆதித்யவர்மா வாளுடன் முன்னால் செல்லும் சம்பிரதாயமும் உண்டு. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவனந்தபுரம் வரும் விமானங்களுக்கும் இது குறித்து ஒரு வாரத்துக்கு முன்பே தகவல் கொடுத்துவிட்டோம். பங்குனி, ஐப்பசி என இரு திருவிழாக்களின் ஆராட்டு நிகழ்ச்சியின் போதும் விமான நிலையம் 5 மணிநேரம் மூடப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.