தலைநகர் சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை புரட்டி எடுத்து வருகிறது. இன்று காலை சற்று ஓய்ந்தது போல் தெரிந்தாலும் பல்வேறு இடங்களில் மீண்டும் வெளுத்து வாங்கத் தொடங்கியுள்ளது. இதனால் இன்று காலை அலுவலகம் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வடகிழக்கு பருவமழையை ஒட்டி மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
இதற்கு பலனாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என்று கூறப்படுகிறது. வடிகால்கள் இல்லாத இடங்களில் மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மழை காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக அண்ணா சாலை, அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோயம்பேட்டில் இருந்து வடபழனி, கிண்டியை நோக்கி பயணம் செய்யும் சாலைகள் அதிக அளவில் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகின்றன. இதற்கு சாலையோரங்களில் தேங்கி நிற்கும் மழைநீர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் பொதுப் போக்குவரத்தை வழக்கமாக பயன்படுத்தும் பலர், மழையால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தங்கள் சொந்த வாகனங்களில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையம் அருகேவுள்ள மேம்பாலத்தில் இருந்து லக்ஷ்மண் ஸ்ருதி வரையில் வரிசை கட்டி வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை பார்க்க முடிகிறது. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த வழியில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து சென்று கொண்டிருக்கின்றன.
மேலும் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சென்னையின் பிரதான சாலைகளில் கடும் நெரிசல் காணப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சூழலில் போக்குவரத்தை சரிசெய்யும் பணிகளில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ஜி.எஸ்.டி சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் வேலைக்கு செல்வோர் இன்று காலை சிரமத்திற்கு ஆளானதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்த 2 மணி நேரத்தில் அரக்கோணம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், திருப்போரூர், உத்திரமேரூர், வேளச்சேரி பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் கிண்டி,பொன்னேரி,உத்துக்கோட்டை,வாலாஜாபேட்டை பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது.