தலைநகர் சென்னையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு முதல் விடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று (நவம்பர் 1) காலை சற்று மழை குறைந்த நிலையில் மீண்டும் வெளுத்து வாங்கத் தொடங்கியது. நகரின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சில சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கி நிற்பது, மரம் முறிந்து விழுதல், மின்வெட்டு பிரச்சினை, மின் கசிவு, கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல், குடிநீருடன் கழிவுநீர் கலப்பது உள்ளிட்டவை தொடர்பான புகார்களுக்கு பிரத்யேக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை,
1913
044 – 25619206
044 – 25619207
044 – 25619208
ஆகியவை ஆகும். சென்னைவாசிகள் மேற்குறிப்பிட்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் “நம்ம சென்னை” மொபைல் செயலி மூலமும் மக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக வடகிழக்கு பருவமழையை ஒட்டி மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
ஆனால் விரைவாக பணிகளை முடிக்காமல் இருந்ததால் அவ்வப்போது பெய்து வந்த மழையால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. சில உயிரிழப்புகளையும் பார்க்க முடிந்தது. இதையடுத்து பணிகள் வேகமெடுத்த நிலையில் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையானது, பல்வேறு பகுதிகளில் தேங்கி நிற்காமல் வடிகால்கள் வழியாக ஓடிவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடிகால்கள் இல்லாத பகுதிகளில் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புதுப்பேட்டை பகுதிகளில் தெருக்களில் இருந்த மழைநீரை மோட்டார் மூலம் சாலைப் பகுதிகளில் விட்டதாக கூறப்படுகிறது.
இது வாகன ஓட்டிகளை அவதிக்கு ஆளாக்கி வருகிறது. மேலும் அசோக் நகர், காமராஜர் சாலை பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை அமைந்திருக்கும் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆதம்பாக்கம் பகுதியில் ராமகிருஷ்ணா நகர் மற்றும் என்.ஜி.ஓ காலனி, ஜவஹர் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்பதை பார்க்க முடிகிறது. இங்கெல்லாம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மரங்கள் முறிந்து விழுந்ததாக இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை.