செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம்… விடாமல் கொட்டும் மழை… தப்பிக்குமா சென்னை?

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை சற்று ஓய்ந்தது போல் தெரிந்தது. ஆனால் மீண்டும் வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டது. இன்றைய தினம் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் உடன் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி எப்படி இருக்கிறது? அதனால் பாதிப்பு ஏதும் வருமா? நீர்மட்டம் எந்தளவு உள்ளது? எனப் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 2.675 டி.எம்.சியாக இருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் 20.29 அடியாக உள்ளது.

தற்போது சென்னையின் குடிநீர் வசதிக்காக 150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டி.எம்.சி. மொத்த நீர்மட்டம் 24 அடி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே முழு கொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 4 அடி மட்டுமே இருக்கிறது. இந்த சூழலில் 23 அடி வரை நீர்மட்டம் உயர்வது கண்காணிக்கப்பட்டு, அதன்பிறகே உபரி நீர் திறப்பது பற்றி முக்கிய முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆலோசனை நடத்தி ஏரியில் இருந்து போதிய அளவு தண்ணீர் திறந்துவிடப்படுவது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன. அதன்படி, ஏரியின் ஐந்து கண், 19 கண் மதகுகள், நீர் வெளியேற்றும் ஷட்டர்கள், மின் மோட்டார்கள், ஏரி கரையின் சுவர்கள் போன்றவற்றிற்கு வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வந்தன. இவை முடிக்கப்பட்ட நிலையில் தற்போது புதுப்பொலிவுடன் செம்பரம்பாக்கம் ஏரி காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.