செங்கல்பட்டு: கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் விமல் ராஜ் (57). விவசாயியான இவர், தனது மனைவி செல்வி (50), மகள் மெர்ஸி (13) ஆகியோருடன் தனது தங்கை மகளின் நிச்சயதார்த்த விழாவிற்காக சென்னை வந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சொந்த ஊருக்கு செல்ல தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் தனது குடும்பத்துடன் புறப்பட்டார். பெருங்களத்தூர் அருகே வந்தபோது திடீரென விமல்ராஜ்க்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
உடனே சக பயணிகள் அவருக்கு தண்ணீர் கொடுத்து ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிங்கபெருமாள்கோவில் அருகே ரயில் வந்தபோது விமல்ராஜ் மயக்கமடைந்தார். சக பயணிகள் முதல் உதவி சிகிச்சை அளித்தும் எந்த பயனும் இல்லை. செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்ததும், அவரை கீழே இறக்கினர். பின்னர் ரயில் நிலையத்தில் மருத்துவர் விமல்ராஜை பரிசோதனை செய்தார்.
ஏற்கனவே விமல்ராஜ் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.