மதுரை: திருக்குறள் புத்தக மோசடி வழக்கின் விசாரணையை தினசரி அடிப்படையில் விசாரித்து 6 மாதத்தில் முடிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஹக்கீம் அஜ்மல்கான் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனம் கடந்த 2010ல் செயல்பட்டது. இந்த நிறுவனத்தில் 100 திருக்குறள் புத்தகங்களை ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கினால் 37வது மாத முடிவில் ரூ.46,900 முதிர்வு தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல் கவர்ச்சிகரமான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதை நம்பி ஏராளமானோர் திருக்குறள் புத்தகத்தை வாங்கி முதலீடு செய்தனர். இதில் சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரூ.65.46 கோடி வரை முதலீடு செய்தனர்.
முதலீடுகளை வசூலித்த நிறுவனத்தினர் முதிர்வுத்தொகையை தராமல் ஏமாற்றியதால் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்து நிறுவனத்தினரை கைது செய்தனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை மதுரை பொருளாதார முதலீட்டு குற்றங்களுக்கான சிறப்பு (டான்பிட்) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து நிறுவனத்தினர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை, வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டுமென கடந்தாண்டு உத்தரவிட்டது.
முந்தைய உத்தரவை பிறப்பித்த நீதிபதி எம்.நிர்மல்குமார் முன், பாதிக்கப்பட்ேடார் தரப்பு வக்கீல் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கின் விசாரணை நடக்கவில்லை. வேண்டுமென்றே காலதாமதம் செய்கின்றனர் என முறையிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணையை கீழமை நீதிமன்றம் தினசரி அடிப்படையில் விசாரித்து 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும். அரசு தரப்பில் ஒவ்வொரு விசாரணையின்போதும் சாட்சிகளை ஆஜர்படுத்த வேண்டும். விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை மாதந்தோறும் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.