கடந்த 2012-ம் ஆண்டு, மார்ச் 29-ம் தேதி அதிகாலை தனது வீட்டிலிருந்து நடைப்பயிற்சிக்குச் சென்ற அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி கல்லணை சாலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இதனால், ‘இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ராமஜெயத்தின் மனைவி லதா. ஆனால் சி.பி.ஐ விசாரணையிலும் குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து ராமஜெயத்தின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவால், இந்த வழக்கு மீண்டும் தமிழக காவல்துறையின் சி.பி.சி.ஐ.டியின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு வசம் சென்றது.
சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி ஷகில் அக்தர் மேற்பார்வையில் போலீஸ் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான டீம், திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வருகிறது. கொலை சம்பவம் நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகுவதால் குற்றவாளிகளைக் கண்டறிவதில் சிக்கல் இருக்கின்றன. அதனால் குற்றவாளிகளைக் கண்டறிய சி.பி.சி.ஐ.டி போலீஸார், 2012-ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் கோலோச்சிய ரௌடிகளின் பட்டியலை சேகரித்து அவர்களில் ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகத்துக்குரியவர்களை மட்டும் அழைத்து விசாரித்தனர். அதில் 12 ரௌடிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் திட்டமிட்டிருக்கின்றனர்.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். “ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை ஆய்வு செய்து என்னென்ன கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது என்பதை தெரிந்துக் கொண்டோம். பின்னர் என்ன காரணத்துக்காக ராமஜெயம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று விசாரணையை தொடங்கினோம். கொலை நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டதால் வழக்கை துப்பு துலக்குவதிலும் ஆதாரங்களை சேகரிப்பதிலும் சில சிரமங்கள் இருக்கின்றன. அதையும் மீறி அறிவியல் ரீதியான ஆதாரங்களைக் சேகரித்து விசாரணையை நடத்திவருகிறோம்.
அதில் ஒரு கட்டமாக ரௌடிகள் சாமி ரவி என்கிற ரவிக்குமார், திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன் என்கிற கணேசன், மாரித்து, சீர்காழி சத்யா, தினேஷ்குமார், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவா என்கிற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன் ஆகிய 12 பேருக்கு உண்மைக் கண்டறிய சோதனை நடத்த அனுமதி கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறோம். அவர்களுக்கு நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் வரும் 1.11.2022-ம் தேதி(இன்று) திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களின் ஆட்சேபனையை தெரிவிக்கலாம். அதன்பிறகு 12 ரௌடிகளுக்கும் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு அதில் கிடைக்கும் தகவலின்படி அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்.
இதற்கிடையில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ராமஜெயம் கொலை குறித்து டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த ரௌடி கும்பலுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருக்கிறது. அவர்கள் அளித்த தகவல்படி ராமஜெயத்தின் கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுபவர்களை ரகசியமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த வழக்கில் கிடைத்திருக்கும் தகவல்கள், ஆதாரங்களை உறுதி செய்ய உண்மை கண்டறியும் சோதனை நிச்சயமாக உதவும் என நம்புகிறோம்.
ஏற்கெனவே ராமஜெயத்தின் குடும்பத்தினர் அளித்த தகவலின்படி சிலர் மீது சந்தேகங்கள் இருந்தன. அவர்களும் எங்களின் விசாரணை வளையத்தில் இருக்கிறார்கள். ராமஜெயத்தைப் போல தமிழகத்தில் நடந்த கொலைகள் குறித்த விவரங்களைச் சேகரித்து அந்த வழக்குகளில் கைதானவர்களிடமும் விசாரணை நடத்தியிருக்கிறோம். ஆனால் அவர்களுக்கும் ராமஜெயம் கொலைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது. இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட ராமஜெயம், திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பவர் புல்லாக வலம் வந்தவர். அதனால் அவருக்கு எதிரிகள் அதிகம். அதனால்தான் என்ன காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்பதைக் கண்டறிவதில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் அரசியல் மோதல் காரணமாக இந்தக் கொலை நடந்தா என்ற கோணத்திலும் விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கொலை தொடர்பாக எந்தத் தகவல் கிடைத்தாலும் அதை முழுமையாக விசாரித்து வருகிறோம். உண்மைக் கண்டறியும் சோதனைக்குப்பிறகு இந்த வழக்கு நிச்சயம் அடுத்தக்கட்டத்துக்குச் செல்லும் என நம்புகிறோம். விரைவில் இந்த வழக்கில் நல்ல தகவல் கிடைக்கும்” என்றார்.