தஞ்சாவூர் தி.மு.க-வில் மாநகரம் சார்பில் நடைப்பெற்ற கூட்டத்தில், `வார்டு செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்களுக்கு எதிராக செயல்படுவதை மாநகர செயலாளரான மேயர் நிறுத்தி கொள்ள வேண்டும்’ என நிர்வாகி ஒருவர் எச்சரிப்பது போல் கோஷ்டி பூசல் குறித்து மேடையில் வெளிப்படையாக பேசியது பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
தஞ்சாவூர் தி.மு.க-வில் மாநகர கழகம் சார்பில் மாநகர செயல் வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. மாநகர செயலாளரும், மேயருமான சண்.இராமநாதன் கூட்டத்திற்கான ஏற்பாட்டை செய்திருந்தார். இதில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கலந்து கொள்ளவில்லை. வரும் 27-ம் தேதி மாநில இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள், அதனை சிறப்பாக கொண்டாட வேண்டும் உள்ளிட்ட பல கருத்துக்களை நிர்வாகிகள் பேசினர்.
குறிப்பாக மாநகரத்தில் நிலவும் உள்கட்சி பூசல் குறித்து நிர்வாகிகள் பலரும் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. கீழவாசல் பகுதி கழக செயலாளரான நீலகண்டன் பேசுகையில், “வட்ட செயலாளர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் குழு அமைக்கின்றனர். அதற்கு மாநகர கழகம் என்ன நடவடிக்கை எடுத்தது என தெரியவில்லை. தீபாவளியை முன்னிட்டு தஞ்சை மாநகராட்சியில் உள்ள கழக நிர்வாகிகளுக்கு தலைவரால் பரிசு வழங்கப்பட்டது. அதனை மாநகர செயலாளரே கொடுத்தது போன்ற தோற்றத்தை உருவாக்கி பெருமை பட்டுகொள்கிறார்.
பகுதி கழக செயலாளர் பதவி எதுக்கு நியமனம் செய்தார்கள் என தெரியவில்லை. மாநகர செயலாளர் அவர்களிடம் கலந்து ஆலோசிப்பதில்லை. மாநகர செயலாளருக்கும், பகுதி கழக செயலாளர்களுக்கும் என்ன வித்யாசம், என்ன பொறுப்பு அவர்கள் கடமை என்னவென்று கழக முன்னோடியான இறைவன் பேசும் போது தயவு செய்து எடுத்து கூற வேண்டும். வார்டு செயலாளருக்கு நோட்டீஸ் செல்வதில்லை. ஒரு வார்டுக்கு மூன்று நான்கு அணிகளாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டு கோஷ்டிகள் உருவாக்கப்படுகிறது.
இப்பிரச்னை எனக்கு மட்டுமல்ல, எல்லா வார்டு செயலாளருக்கும் உள்ளது. மாநகர செயலாளர் இது போன்று செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நல்லா இருக்காது பார்த்துகங்க” என எச்சரிக்கும் வகையில் பேசி முடிக்க, இதனை ஆமோதிப்பது போல் கூட்டத்தில் பலத்த கைத்தட்டு எழுந்தது. பின்னர் பேசிய நிர்வாகி ஒருவர், `கழகத்தில் பிரிவுகள் இருந்தால் வளர்ச்சிக்கு அறிகுறி. அதே நேரத்தில் பிளவுகள் இருப்பது வீழ்ச்சிக்கு அறிகுறி.
சின்னகுச்சியாக இருந்தாலும் சேர்த்துக் கொண்டு செயல்பட வேண்டும்’ என்றார். பின்னர் பேசிய மூத்த முன்னோடி இறைவன், “நிர்வாகிகள் பேசுறத பாக்கும் போது மனசுல கசப்பு, விரோதம் இன்னும் இருக்கு என்பதை காட்டுகிறது. இப்ப வெளிப்படையாக பேசுறதுக்கே பயமா இருக்கு. முன்பெல்லாம் அப்படி கிடையாது. இப்போ பேசுறதுக்கு முன்னாடி இவர் யார் ஆளுனு பார்க்க வேண்டிய நிலை இருக்கு. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றுப்பட்டு உழைக்க வேண்டும்” என்றார். பின்னர் பேசிய மேயர் சண்.இராமநாதன், “பகுதி கழக செயலாளர் கூறிய கருத்திற்கு கழகத்தின் வளர்ச்சிக்காக மன்னிப்பு கேட்கிறேன், மன்னிப்பு கேட்பதில் தவறில்லை” என்றார்.