போட்டிமிகு தேயிலைச் சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமாயின் தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருளாதாரத்தில் இது மிகவும் இன்றியமையாதது எனக்கூறிய ஜனாதிபதி, ஆரம்பத்தில் தேயிலை தொழிற்துறையில் கிடைத்த வெற்றியை மீண்டும் உறுதி செய்ய வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார்.
பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று முன்தினம் (30) பிற்பகல் நடைபெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேலும் உரையாற்றுகையில்,
“தேயிலை உற்பத்தித் துறையில் கடந்து வந்த இக்கட்டான நிலைமைகள் தொடர்பில் அதன் தலைவர் கூறியிருந்தார். டைட்டானிக் கப்பல் பனிப் பாறையில் முட்டியதன் பின்னரே நான் அதனை பொறுப்பேற்றுள்ளேன். நான் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். பொருளாதார நெருக்கடியை சந்தித்திருப்பதாக பிரகடனப்படுத்தியுள்ளோம்.
மக்களுக்குப் போதுமான அளவு உண்பதற்கு உணவு இருக்கிறது என்பதையும் முதலில் உறுதி செய்தாக வேண்டும்.
இந்த நெருக்கடியுடன் எமது பொருளாதாரம் தடைப்பட்டுள்ளது. பணவீக்கம், நிதி நெருக்கடி ஆகிய அனைத்தும் எமது பொருளாதாரத்திற்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளன. அதிலிருந்து மீள வேண்டும்.
முதலாவதாக நாம் எம்மிடமுள்ள வெளிநாட்டுக் கையிருப்பை தக்க வைத்துக் கொள்வதுடன் இறக்குமதியை மட்டுப்படுத்த வேண்டும். அதன் ஊடாக, எம்மால் எரிபொருள், உரம் மற்றும் மருந்து ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
வருமானம் இல்லாமல் போனதால் எமக்கு கட்டணங்களைச் செலுத்துவதற்கும் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போயுள்ளது. எனினும் 1.7 மில்லியன் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கவும் கடன்களை மீளச் செலுத்தவும் வேண்டியுள்ளது என்பதை நாம் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.
நாம் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக அறிவித்துள்ளோம். முதலாவதாக நாம் வங்குரோத்தடைந்துள்ளோம் எனும் நிலையை மாற்றுவதற்கு அவசியமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளோம் என்பதை உறுதிபடுத்த வேண்டும். அதற்காக நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் கலந்துரையாட வேண்டும். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு அமைப்பும் இதைச் செய்யுமாறு எம்மிடம் வலியுறுத்தியுள்ளன.
2019 ஆம் ஆண்டு வரை எம்மிடம் ஒரு திட்டம் இருந்தது. எனவே நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஆழமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும். அதனை தவிர எம்மிடம் வேறு தெரிவு எதுவும் இல்லை. இவ்வருடம் எமது பொருளாதார வளர்ச்சி வீதம் 8 சதவீத மறைப்பெருமானமாக அமைந்திருக்கிறது. கடந்த வருடம் மறைப்பெருமானத்திலே நாட்டின் வளர்ச்சி வீதம் காணப்பட்டது.
அடுத்த வருடம் இது 3 சதவீதமாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்குமென அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இது ஒப்பீட்டளவில் மிக மோசமாகவே இருக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது கவலையளிக்கும் விடயமாகும். இதனால் ஐரோப்பியா மற்றும் ஏனைய நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கத்தால் வாழ்க்கைச் செலவும் அதிகரிக்கும். இது ஆடை, தேயிலை, கோப்பி ஆகியவற்றின் ஏற்றுமதியில் வீழ்ச்சியை ஏற்படுத்தி பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே நாம் ஒருவாறாக இவ்வருடத்தைக் கடந்து அடுத்த வருடத்துக்குச் செல்ல வேண்டும். சுமார் இரண்டு வருடங்களை நாம் சமாளிக்க வேண்டும். எமது வருமானம் 15% இலிருந்து 8.5%ஆக குறைந்துள்ளது. எனவே நாம் மீண்டும் 15% வருமானத்தைப் பெற வேண்டியுள்ளது. 2026 இல் இந்த இலக்கை அடைய வேண்டும். நான் நான்கு வருட நிகழ்ச்சித் திட்டத்துக்குச் சென்றேன். இரண்டு வருடங்களுள் அதனை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. 2023 ஆம் ஆண்டு இலங்கைக்கு மட்டுமன்றி உலக அளவில் மிக மோசமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயம் உள்ளிட்ட அனைத்துக்கும் வரி அறவிட வேண்டியுள்ளது. அதனைத் தவிர எம்மிடம் வேறு வழியில்லை. நாம் அதை படிப்படியாக செய்திருக்கலாம் என்று நான் நினைத்தாலும் எமக்கு பணம் தேவைப்பட்டதால் எம்மால் அவ்வாறு செய்ய முடியவில்லை.
கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டியுள்ளது. சாதாரண மக்கள் வாழ்வதற்கு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே முதலாவதாக நாம் தற்போதுள்ள நெருக்கடியை மீளகட்டமைக்க வேண்டும். எனவே நாம் எமது கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும். அதற்காகவே நான் முதலில் பாரிஸ் கிளப்பிற்குச் சென்றேன். அதில் உள்ளவர்கள் அனைவரும் மேற்குல நாடுகளையும், ஜப்பானையும் சேர்ந்தவர்கள்.
ஆனால் நாம் தனித்துவமானதொரு நிலையிலேயே இருக்கின்றோம். எமக்கு கடன் வழங்க முன்வந்துள்ள மூன்று நாடுகளுள் ஒன்று மாத்திரமே பாரிஸ் கிளப்பிற்கு சொந்தமானது. மற்றைய இரண்டும் அதில் அங்கத்துவம் வகிக்காத நாடுகள் ஆகும். அவை இந்தியா மற்றும் சீனாவாகும்.
நான் ஜப்பானுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதோடு இந்தியா மற்றும் சீனாவுடன் தற்போது பேச்சுக்களை ஆரம்பித்துள்ளேன். இருதரப்பு விடயங்களை ஆராயும் வகையில் நாம் பொதுவானதொரு மேடையில் இது தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம். இதுவே நாம் முன்னெடுக்க வேண்டிய செயன்முறையாகும்.
உயர் வருமானத்தை பெற்று முன்னோக்கிச் செல்ல முடியும் என்பதை காண்பிக்க வேண்டும். பல நாடுகள் எமக்கு நேரடியாகவும் சில நாடுகள் வெவ்வேறு அமைப்புக்களுக்கூடாகவும் உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.
எனவே உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எம்மிடம் போதுமானளவு உரம் கையிருப்பில் உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகள் எமக்கு உதவ முன்வந்துள்ளன. எனவே உரப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிட்டது. எரிபொருளுக்காக யாரும் எமக்கு பணம் தரப்போவதில்லை. எனவே எம்மிடம் கையிருப்பில் உள்ள வெளிநாட்டுக் கையிருப்பில் உரம் வாங்குவதற்கான பணத்தைக் கொண்டே எரிபொருளை வாங்க வேண்டும்.
உக்ரேன் யுத்தம் மற்றும் குளிரான காலநிலைக் காரணமாக எரிபொருள் விலை வரும் டிசம்பர் / ஜனவரியளவில் அதிகரிக்குமென எதிர்பார்த்திருந்தபோதிலும் அதன் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தற்போது உரம் கையிருப்பில் உள்ளதால் விவசாயத்திற்கு புத்துயிரளிக்க வேண்டும். நெல்லில் ஆரம்பித்து, தேயிலை மற்றும் ஏனைய பயிர்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
பெரும்போகம் மூலம் அடுத்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிக விளைச்சல் கிடைக்குமாக இருந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மைய ஏற்படுத்த அது பெரும் உதவியாக இருக்கும்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு செயற்பட்டால் இதனை அடைய முடியும். வெளிநாட்டு நிதி கையிருப்பை இப்போது அதிகரிக்க வழியில்லை. மற்ற எல்லா வழிகளையும் இழந்துவிட்டதால், நமது தொழில் முயற்சிகளை டொலரில் விற்பதே வெளிநாட்டு மூலதனத்தை திரட்ட ஒரே வழியாக இருக்கும்.
இதன் ஊடாக கையிருப்பில் சுமார் 4 பில்லியன் டொலர்களை சேர்க்க முடியும். இது ரூபாயை மேலும் வலுப்படுத்தும். முழுமையான வர்த்தகப் பொருளாதாரம் மற்றும் உயர் பொருளாதார வளர்ச்சி வீதத்தை நோக்கிச் செல்வதாக இருந்தால் இவை அனைத்தும் சாத்தியமாகும்.
பணவீக்கம் உயர் மட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் எமக்கு அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் வட்டி வீதங்கள் குறைவடைவதைக் காண முடியும். எனவே, நாங்கள் எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளால், அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள், வட்டி வீதத்தை எளிதாக்கி அதன் பயனை மக்களுக்கு வழங்க முடியும்.
கடந்த இரண்டு வருடங்களில் 3.2 டிரில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதனால், உற்பத்தியை பெருக்குவதைத் தவிர, இப்பிரச்சினைகளை குறுகிய வழியில் தீர்க்க முடியாது.
தேயிலை உற்பத்தித் துறையில் உள்ள குறைபாடுகளை அறிவோம். போதுமான உரம் கிடைத்துள்ளது. தேயிலைக் கைத்தொழிலை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டும்
பொருளாதார மாதிரி (மொடல்) ஒன்றுடன் நாம் முன்னேற வேண்டும். ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.
விவசாயத்தை நவீனப்படுத்தும் வேலைத்திட்டத்தில் இறங்கியுள்ளோம். இதன் ஊடாக தேயிலைக் கைத்தொழிலுக்கு பெரும் மதிப்பு ஏற்படும்.
தேயிலைக் கைத்தொழிலை மறுசீரமைத்து உங்களின் ஆதரவுடன் முன்னோக்கி செல்லும் வேலைத்திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். இதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பலை காப்பாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்’’ என்றும் ஜனாதபதி தெரிவித்தார்.