புதுடெல்லி: இந்தியாவின் பன்முகத் தன்மையில் காணப்படும் ஒற்றுமை நமது எதிரிகளை கலங்க செய்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் கெவாடியா நகரில் சர்தார் வல்லபபாய் படேலின் 147-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பொது மக்கள் மத்தியில் பேசியதாவது:
இந்தியாவின் பன்முகத் தன்மையில் காணப்படும் ஒற்றுமை நமது எதிரி நாடுகளை கலங்கடிக்க செய்துள்ளது. இந்த நிலை, இன்றல்ல ஆயிரம் ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. காலனி ஆதிக்கத்தில் கூட இதே நிலைதான். வெளி நாட்டவர் அனைவரும் நமது ஒற்றுமையை சிதைக்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால், அதை செய்ய முடியவில்லை.
நாடு சுதந்திரமடைந்தபோது சர்தார் வல்லபபாய் படேல் போன்ற தலைவர் இந்தியாவில் இருந்ததால் வலிமையான கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
எனவே சர்தார் படேலின் கொள்கைகளைப் பின்பற்றி, நம்மைப் பிளவுபடுத்தும் காலனித் துவம், ஊழல் மற்றும் வாரிசு அரசியல் போன்ற தீமைகளை எதிர்த்து நாம் ஒன்றுபட்டு நின்று போராட வேண்டும்.
சுதந்திரமடைந்த காலத்தில் நாட்டை பிளவுபடுத்தும் இந்திய-விரோத சக்திகளின் முயற்சிகளை சர்தார் படேல் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தார்.
நமது ஒற்றுமையை உடைக்க முயற்சிப்பவர்கள் வெளிப்படை யான எதிரிகள் மட்டுமல்ல, நமக்குள்ளே ஒருவராகவும் ஒளிந்திருக்கலாம். ஜாதியின் பெயரால் ஒருவரை ஒருவர் எதிர்க்க கதைகள் உருவாக்கப் படுகின்றன. பிராந்தியத்தின் பெயராலும் நம்மைப் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சோகம் – கடமை: படேல் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதிலும் எனது மனம் முழுவதும் மோர்பி நகரில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்டவர்களுடன்தான் இணைக்கப்பட்டுள்ளது. அந்த சம்பவத்தால் இதயத்தில் வேதனை ஒருபுறம், மறுபுறம் கடமையின் பாதையிலும் நான் பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அந்த கடமையின் காரணமாகத்தான் தேசிய ஒற்றுமை தினத்தில் உங்கள் மத்தியில் நான் இங்கு உள்ளேன். தொங்கு பால விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத் துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறேன். குஜராத் அரசு அவர்களுடன் உள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.
அமித்ஷா புகழாரம்: டெல்லியில் சர்தார் படேல் வித்யாலயாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசும்போது: ‘‘நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல். ஆனால், அவரை மட்டும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக தேர்வு செய்திருந்தால் இந்தியா பல இக்கட்டான பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. படேல் தீரமிக்க மனிதர் மட்டுமல்ல. தனது எண்ணத்தை செயல்படுத்த கடுமையாக உழைத்தவர். அவர் ஒரு கர்மயோகி’’ என தெரிவித்தார்.