கோவை குண்டுவெடிப்பையும், நயன்தாராவுக்கு குழந்தைகள் பிறந்ததையும் தொடர்புபடுத்தி பேசி, ஆளும் அரசை விமர்சிப்பதாக எண்ணி, கீழ்த்தனமான அரசியல் செய்து வரும் அதி புத்திசாலிகளுக்கு பதிலடி கொடுக்காமல், ஆளும் அரசு அமைதி காப்பது வியப்பாக உள்ளது. வாடகை தாய் முறையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தைகளை பெற்றெடுத்த விவகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அதற்கு சட்ட ரீதியான காரணங்கள் உள்ளன.
திருமணமாகி 5 வருடங்கள் ஆன பிறகே வாடகை தாய் மூலம் ஒரு தம்பதி பெற்றோர் ஆக முடியும். ஆனால், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி திருமணம் செய்துகொண்ட நான்கு மாதத்திலேயே இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனதாக தெரிவித்தது விசாரணை வியூகங்களுக்கு வழி வகுத்தது. விசாரணைக்கு பிறகு அரசு வெளியிட்ட அறிக்கையில், விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி 2016 மார்ச் 11
தேதியே பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும், ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுத்ததும் தெரிய வந்தது. இருப்பினும் சிகிச்சை குறித்த ஆவணங்கள் சமர்பிக்கப்படாததால் சம்மந்தப்பட்ட மருத்துவமனை மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அரசு ஆலோசனையில் இறங்கியுள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் நயன்தரா – விக்னேஷ் சிவன் மீது குற்றசாட்டுகள் வைக்கப்படவில்லை. இதனால் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
ஆனால், பாஜக, அதிமுகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் சிலர் திமுகவை விமர்சிப்பதாக கருதி நயன்தாராவை டார்கெட் செய்து பேசி வருகின்றனர். ”கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தை குறித்து வாய் திறக்காத திமுக அரசு, நயன்தாராவுக்கு எப்படி குழந்தை பிறந்தது என்பதில் ஆர்வம் காட்டுவதாக நகைக்கின்றனர்.
பொது வாழ்வில் உள்ளவர்கள் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை முறையை விமர்சிப்பது முற்றிலும் அநாகரீகமானது என்பதை அறியவே மாட்டார்களா என்று வேதனை தெரிவிக்கின்றனர். முன்னதாக குழந்தை விஷயத்தில் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது என்று விமர்சித்த தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி ”நயன்தாராவுக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தால் நமக்கு என்ன..? அவரது கணவர் மாபெரும் தியாகி, அவரே அமைதியாக இருக்கிறார். ஆனால் அமைச்சர் மா. சுப்ரமணியன் அதற்காக குழு அமைத்துள்ளார். நயன்தாராவை ”ஒன்பது தாரா” என்று தமிழிலும் அழைக்கலாம் என்று பேசிய வி.பி.துரைசாமி, அரசை விட நயன்தாராவை டார்கெட் செய்து பேசியதுதான் அதிகம். நடிகைகளை வைத்தே கட்சியை வளர்க்கிறார்கள் என்ற விமர்சனத்தை எதிர்கொள்ளும் பாஜக, ஒரு நடிகை மீது பொதுவெளியில் வன்மத்தை கக்குவது கண்டனத்துக்குரியது என்கின்றனர்.
இவரை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசும்போது, கோவை குண்டு வெடிப்பை பற்றி நீங்களும், நாங்களும்தான் பேசி கொண்டிருக்கிறோம். ஆனால், தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கு, நயன்தாரா முறையாக குழந்தைகள் பெற்றாரா இல்லையா என்பதுதான் கவலை என்று கூறியுள்ளார். இது போன்ற பேச்சுக்களை மாநில அரசு கண்டிப்பதாக தெரியவில்லை. கோவை குண்டு வெடிப்பு குறித்தும் வாய் திறக்காமல், அரசியல் வாதிகளின் அநாகரிக பேச்சுக்களால் பந்தாடப்படும் நயன்தாராவுக்கும் கவசமாக நிற்காமல், அரசு இப்படி இருக்கலாமா என்ற கேள்விகள் எழுகின்றன.