தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. இந்த செய்தி தீயாய் பரவ பெரு மழையை பார்க்க முடியவில்லையே? என்ற எதிர்பார்த்திருந்த மக்களுக்கு பதில் கிடைத்துவிட்டது. அக்டோபர் மாதத்தின் கடைசி நாளான நேற்று (31-10-2022) இரவு வெளுத்து வாங்க தொடங்கியது. இதற்கு முன்பு விட்டு விட்டு பெய்த மழையை பார்த்த மக்கள், நேற்று தான் விடாமல் கொட்டி தீர்க்கும் மழையை நடப்பு சீசனில் முதல்முறை பார்த்தனர்.
குறிப்பாக தலைநகர் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இரவு முழுவதும் பெய்து இன்று காலையும் பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, கே.கே.நகர், ராயப்பேட்டை, பாரிஸ் கார்னர்,
மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மந்தைவெளி, வேளச்சேரி, ஆதம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதில் சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையும் விதிவிலக்கல்ல. சாலை நெடுகிலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இரவில் சென்ற வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்லும் அவலநிலை ஏற்பட்டது.
இது போக்குவரத்து நெரிசலாக மாறி வாகன ஓட்டிகளுக்கு தலைவலியை ஏற்படுத்திவிட்டது. இந்த சூழலில் இரவே களப்பணியில் இறங்கிவிட்டார் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன். அதாவது, ஜி.பி.சாலை, என்.எஸ்.சி போஸ் சாலை, பிரகாசம் சாலை, வால்டாக்ஸ் சாலை, அண்ணா சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் ஆய்வு செய்தார்.
கூடவே மாநகராட்சி அதிகாரிகளும் கார்களில் படையெடுக்க எங்கெல்லாம் பாதிப்புகள் இருக்கின்றன என்று ஆய்வு செய்ய தொடங்கினர். மழைநீர் தேங்காமல் விரைவாக பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மேயர் பிரியா ராஜன் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் இன்று காலை அலுவலகம் செல்வோர், வேறு வேலைகளுக்கு செல்வோர் கவனமாக சாலைகளில் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.