பக்கத்துல இருந்து கஷ்டப்படுறதைவிட, விலகி நின்னு ரசிக்கிறதும் காதல்தான் | ஜன்னலோரக் கதைகள் – 8

அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிந்த தோழி அவள். அடிக்கடி பேசிக் கொள்ளவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் அவள் பகிரும் அனைத்தையும் தவறாமல் பார்த்து ஹார்ட் அழுத்திவிடுவது என் இயல்பு. படங்களுடன் அவள் பகிரும் கமென்ட்ஸை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று மனதில் நினைத்துக் கொள்வேன். நீண்ட இடைவெளிக்குப் பின் ஃபோனில் தொடர்பு கொண்டு, `உன்னை மீட் பண்ணணும்’ என்று சொன்னாள். `குழந்தை, குடும்பம் என்று ஓடிக்கொண்டே இருப்பதால் வெளியில் வந்து நேரம் செலவழிப்பது கொஞ்சம் சிரமம்’ என்றேன். `சரி, நீ ஆபீஸ் போறதுக்கு டிராவல் பண்ணுவல்ல… அப்போ நானும் ட்ரெயின்ல வர்றேன். நாளைக்கு மீட் பண்ணலாம். நாளைக்கு உனக்கு ஓ.கேவா?’ என்றாள். `ஓ.கே’ என்றதும் ஃபோனை துண்டித்தாள். திட்டமிட்டதுபோல் மறுநாள் காலையில் பயணம் தொடர்ந்தது.

ரயில் நிலையம்

நான் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஏறினேன். ரயிலில் கூட்டம் குறைவாகவே இருந்தது. அரைமணி நேரப் பயணத்திற்குப்பின், ரயில் ஊரப்பாக்கம் நிலையத்திற்குள் நுழைந்தது. எழுந்து சென்று வாசலுக்கு நேராக நின்று கொண்டு, அவள் இருக்கும் திசையைத் தேடினேன். கைப்பையுடன் நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து கைகளை அசைத்து பெயரைச் சொல்லி அழைத்தேன். அவளும் பதிலுக்கு கை அசைத்தாள். ரயில் மெள்ள தன் வேகத்தைக் குறைத்தது. படபடப்பாக நடந்து வந்து ரயிலில் ஏறினாள். அவள் முகம் வழக்கமான எனர்ஜியில் இல்லை. அவளுடைய கண்களை, முதல் முறையாக மை இல்லாமல் அன்றுதான் பார்த்தேன்.

ரயிலில் ஏறியதும் எனக்கு எதிர் சீட்டில் அமர்ந்து ஜன்னலை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள். ரயில் நகர்ந்தும் அமைதி தொடர்ந்தது. அமைதியை உடைத்து, நானே பேச்சைத் தொடங்கினேன்.

`ஆபீஸ் வேலையெல்லாம் எப்படிபோகுது?’

`ஏதோ போகுது…’

மீண்டும் நிசப்தம்!

`வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?’

`ம்’

`வழக்கமா ஒரு வார்த்தைக்கு பத்து வார்த்தை பேசுவ… இப்போ என்னாச்சு உனக்கு? எதுவா இருந்தாலும் சொல்லு. தீர்த்து வைக்க முடியலைனாலும், ஆறுதல் சொல்றேன்’ என்றதும், அப்போதுதான் என் கண்களை நிமிர்ந்து பார்த்தாள்.

நிராகரிப்பவரை நிரந்தரமாக அழிப்பதல்ல காதல்!

`ஒண்ணுமில்ல.. ஒண்ணுமில்ல..’ என்றாள்.

மீண்டும் ஒருமுறை அழுத்திக் கேட்டதும், `லவ் பண்ணிருக்கியா நீ’ என்று என் கண்களைப் பார்த்தாள். அவளின் பிரச்னை என்ன என்பது புரிந்தது. `ஆமாம்’, என்று முடித்துக் கொண்டேன்.

எதையோ சொல்ல வந்து, சொல்லலாமா வேண்டாமா யோசித்துக் கொண்டிருந்தவள், அமைதியைக் கலைத்து, `ஒரு ரிலேஷன்ஷிப்புல இருந்து என்னால வெளிய வர முடியல. வாழ்க்கையில எல்லாமே முடிஞ்ச மாதிரி இருக்கு…’ என்றபடி குரல் லேசாக தழுதழுத்தது. `என்ன ஆச்சு’ என்று கேட்கும்போதே கைகளை இறுகப் பற்றிக் கொண்டு அமைதியானாள். ஜன்னல் பக்கம் திரும்பியவளின் பார்வை, கண்ணீர் வடித்து மீண்டும் என் பக்கம் திரும்பியது. `சென்னை வந்தப்போ இங்க எனக்கு எல்லாமே பயமா இருந்துச்சு. புதுசா இருந்துச்சு. கூட வேலைபார்க்கிறவங்க எல்லாருக்கும் பாய் ஃபிரெண்ட்ஸ், லவ்வர்னு யாராவது இருந்தாங்க. அப்படி யாரும் எனக்கு இல்லையேனு ஃபீல் பண்ணும்போதுதான், அவன் என் வாழ்க்கையில வந்தான். என் ஃபிரெண்டோட, ஃபிரெண்ட். ஒரு பொது நிகழ்ச்சியில மீட் பண்ணோம். `ஹாய்’ங்கிற உரையாடல்லதான் தொடங்கினோம். முதல் மீட்ல ஃபோன் நம்பரெல்லாம் ஷேர் பண்ணிக்கல. ஆனா, அன்னைக்கு எடுத்த போட்டோக்கள் எல்லாம் என்னோட ஃபோன்ல இருந்துச்சு. அதனால, நண்பன்கிட்ட என் நம்பரை வாங்கி ‘போட்டோஸ் அனுப்புங்க’னு எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தான். ஏன்னு தெரியலை! வாட்ஸப்ல இருந்த அவனுடைய டிஸ்ப்ளே போட்டோவை ஜூம் பண்ணிப்பார்த்தேன். அவனும் என்னோட போட்டோவ ஜூம் பண்ணிப் பார்த்ததா ஒரு டைம் சொன்னான். இப்படி தொடங்குன பயணம், எப்போ காதலாக மாறுச்சுனுகூட எனக்கு ஞாபகம் இல்ல.

காதல் தோல்வி

`சாப்பிட்டியா’னு தொடங்குற உரையாடல், ராத்திரி ஒரு மணி வரைகூட தொடர்ந்துச்சு. பேசிப்பேசி தீராத உரையாடல் அது. வாழ்க்கையில எல்லாமே புதுசா இருந்துச்சு. கொண்டாட்டமா இருந்துச்சு. கதை பேசிக்கிட்டே தூர தேசங்களுக்கு போயிருக்கோம். காதலைக் கொண்டாடும், வர்ணிக்கும், சிலாகிக்கும் அத்தனை பாட்டுலயும் என்னை ஹீரோயினாகவும், அவனை ஹீரோவாகவும் ஃபீல் பண்ணிருக்கேன். ஒரு காபி குடிக்கும் நேரத்தை இவ்ளோ சுவாரஸ்யமானதா மாத்த முடியுமானு தோணியிருக்கு. ஆனா, அது தான் காதல். அவனுக்கு பிடிச்ச கலர் டிரெஸ்ஸை தேடித்தேடி வாங்க ஆரம்பிச்சேன். என்னை நானே அழகு பண்ணிக்கிட்டேன். ஃபிரெண்ட்ஸோட பேசுறது குறைஞ்சுது. வீட்ல பகிர்ந்துக்க முடியாத ரகசியங்கள் அதிகமாச்சு. எங்க காதல் பத்தி வீட்ல சொல்றதுக்கும், அடி வாங்குறதுக்கும்கூட நான் மனசளவுல தயாராகிட்டேன். வாழ்க்கை இப்படியே இருக்கப்போகுதுனு நினைச்சுட்டு இருந்த நேரம், எங்களுக்குள்ள சின்ன பிரச்னை வந்துச்சு. நானும் கோபமா பேசுனேன், அவனும் பேசுனான். அன்றைய உரையாடல் அதோட முடிஞ்சு போச்சு.

மறுநாள் நிதானிச்சு பிரச்னையை சரி பண்ணலாம்னு கால் பண்ணேன். ஃபோனை எடுத்து, `இவ்ளோ ஆட்டிட்யூடோட இருக்கற பொண்ணு எனக்கு வேணாம்’னு சொன்னான். சாதி, மதம்னு உரையாடல் எங்கெங்கேயோ போச்சு. பழகின அத்தனை மாசங்கள்ல பார்க்காத அவனோட இன்னொரு முகத்தை அன்னைக்குப் பார்த்தேன். நமக்கு செட் ஆகாதுனு கட் பண்ணிட்டான். திரும்பி எத்தனையோ முறை பேச ட்ரை பண்ணிட்டேன். பிளாக் பண்ணிட்டான். அவன் ஃபிரெண்ட்ஸுக்குகூட கால் பண்னி பேசுனேன். ஆளுக்கு ஒரு கதை சொன்னாங்க. இன்னொரு பொண்ணுகூட கல்யாணம் ஆகப்போகுதுனு சொன்னாங்க. அதையெல்லாம் நான் நம்பல. இன்னும் சில மாசத்துல எல்லாம் சரியாகிடும். என்னைப் பார்க்க அவன் வருவான்னு மனசை தேத்திக்கிட்டு இருந்தேன். அவனோட சோஷியல் மீடியால அவன் போடுற எல்லா போஸ்ட்டும் பார்ப்பேன். கடைசியா அவன் போட்டிருந்த பதிவில், `கமிட்டட் ‘னு போட்டு ஒரு பொண்ணோட போட்டோ போட்டிருந்தான்… நொறுங்கிப் போயிட்டேன். அஞ்சு நாளா நான் சரியா சாப்பிடல; தூங்கல. அம்மா, அப்பாகிட்ட பேசல. ஆபீஸ் வேலைகளை சரியா செய்யல. அழுது அழுது கண்கள் வறண்டு போச்சு. எங்க போனாலும் அவன் இருக்குற மாதிரியே இருக்கு. சுயமரியாதையை விட்டுட்டு, என் மேலதான் தப்புனு ஒரு டைம் அவன்கிட்ட பேசணும்னு தோணுது. என் மேல எனக்கே கோபம் வருது. மொத்தத்துல பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு. எனக்கு எப்படி இந்த ரிலேஷன்ஷிப்ல இருந்து வெளிய வர்றதுனுகூட தெரியல. உச்சகட்டமா தற்கொலை பண்ணிக்கலாமானுகூட நேத்து தோணுச்சு. அதான் உனக்கு கால் பண்ணி மீட் பண்ணலாமானு கேட்டேன்…’

அவளுடைய பேச்சு அதிர்ச்சியை நோக்கித் தள்ளியது என்னை. `நல்லநேரம், இன்னொரு நாள் சந்திப்போம்னு நான் நேத்து சொல்லல’ என்று நினைத்துக் கொண்டேன். ஆறுதல் சொல்ல வழியில்லாமல் அமைதியானேன். பொதுவாக, காதல் தோல்வி என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே மாதிரியான வலியைத் தரக்கூடியதுதான். ஆண்களுக்கு அந்த உணர்வுகளை திசை திருப்பிக்கொள்ள வெவ்வேறு பாதைகள் இருக்கின்றன. ஆனால், பெண்களுக்கு தனியே உட்கார்ந்து அழுவதைத் தவிர வேறு வழி இல்லை. சில நேரங்களில் வேறு ஒருவரிடம் பகிரும்போது, அதனை அவர்கள் தவறாக நினைத்துக் கொள்ளவோ, தவறாக ஜட்ஜ் பண்ணவோகூட வாய்ப்பிருக்கிறது.

woman power (Representational Image)

ரயில், கிண்டி ரயில் நிலையம் வரும்போது கூட்டம் குறைந்தது. அழுது கொண்டிருந்த அவளை மடியில் சாய்த்துக் கொண்டேன். `நீ அவனுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அவன் உனக்கு கொடுக்கல. அதனால் நீ அந்த ரிலேஷன்ஷிப் பிரேக் ஆனது பத்தி கவலைப்படாத. இதே ஆட்டிட்யூடை அவன் திருமணத்துக்கு பின்னாடி உன்கிட்ட காட்டியிருந்தா, அது உன் வாழ்க்கையை இன்னும் சிக்கலானதா மாத்தியிருக்கும். ஸோ நீ அவனைவிட்டு விலகினது நல்லது. உன் ஆட்டிட்யூட்னால நீ அவனை மிஸ் பண்ணிட்டேன்னு உன் மனசுக்கு தோணுச்சுனா, வருத்தப்படலாம். ஆனால் எல்லாம் முடிஞ்சுருச்சுனு நினைக்காத. காதலனோ, காதலியோ கொடுத்த இடத்தை வேறு யாரும் நிரப்ப முடியாதுதான். ஆனா, பிடிக்கலைனு ஒருத்தர் ஒதுங்கும்போது, அவங்களைக் கட்டாயப்படுத்துறது காதல் ஆகாது. கட்டாயத்துல உண்மையான அன்பையும் எதிர்பார்க்க முடியாது. பக்கத்துல இருந்து கஷ்டப்படுறதைவிட, விலகி நின்னு அவங்களோட உணர்வுகளை ரசிப்பதுல உன்னோட காதலை வெளிப்படுத்து. உனக்கு யாரும் இல்லைனு நினைக்கிறது பைத்தியக்காரத்தனம். இத்தன வருசம் உன்னைக் கொண்டாடிய குடும்பம், உன்னோட புரியாத செயல்பாடுகளால, அமைதியால உனக்கு ஏதும் பிரச்னையானு இப்போகூட உனக்காக வருத்தப்பட்டுக்கிட்டு இருப்பாங்க. அவங்களோட நேரம் செலவிடு… ஃபோன் பண்ணி பேசு. எல்லாம் சரியாகிடும்’னு சொல்லியபடியே, அவள் கையிலிருந்த ஃபோனை வாங்கி, அவளின் அப்பாவுக்கு கால் பண்ணி, ஸ்பீக்கரில் போட்டேன். `என்ன சாமி உடம்பு சரியாகிருச்சா?’ என்ற அந்தத் தகப்பனின் குரலில் அவ்வளவு ஏக்கம். கண்கள் கலங்கியவாறே இவளும் பேசினாள். உண்மையில் அன்பு செலுத்த உலகமே நமக்காக இருக்கும்போது, நாம்தான் வேற்றுக்கிரகத்தை நோக்கிச் செல்கிறோம். அன்பு என்பது நம்மைக் கொண்டாடுவது. அதை நம்மவர்களிடம் தேடுவோம்.

அன்பு சூழ் உலகிது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.