தமிழகத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியது. இதற்காக அரசு சிறப்பு நிதியாக ரூ.5,000 ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொட்டிக்குப்பம் ஊராட்சியின் அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர் செல்வராணி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திறந்தவெளியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் நல பணியாளர் ஊராட்சி மன்ற செயல்பாடுகள் குறித்து அறிக்கையை வாசித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென மழை பெய்ய தொடங்கியதால் கூட்டத்திற்கு வந்த பெண்கள் குடை பிடித்தபடி அமர்ந்திருந்ததாக சொல்லப்படுகிறது.
கிராம சபை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஊராட்சியின் நிதி ஒதுக்கீடு தொடர்பாக மக்கள் நலப் பணியாளர் சின்னத்துரை பேச முயன்றார். அப்பொழுது குறுக்கிட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதேபோன்று தொட்டிக்குப்பம் ஊராட்சி சேர்ந்த இளைஞர் ஒருவர் கிராமத்தில் குடிநீர் தொட்டி கட்டி பல மாதங்கள் ஆகியும் இதுவரை செயல்பாட்டுக்கு வராதது ஏன் எனவும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் செயல்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக கிராம சபை கூட்டம் பாதியிலேயே முடிந்தது. சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு தமிழக அரசு ரூ.5,000 நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் ஏன் கிராம சபை கூட்டத்திற்கு பந்தல் அமைக்கவில்லை, கிராம மக்களுக்கு தேநீர் சிற்றுண்டி வழங்கவில்லை என கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி “நான் பட்டியல் இன பெண் தலைவர் என்பதால் துணைத் தலைவர் எதற்கும் ஒத்துழைப்பு தருவதில்லை. இதனால் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகள் தடைபட்டுள்ளது. சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை பெறவும் அவர் கையெழுத்து இட மறுத்துவிட்டார்” என தெரிவித்துள்ளார்.