புழல்: சென்னை செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் – திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சிக்னல்கள் இல்லை. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்படாததால் வாகனங்கள் கண்டபடி செல்கிறது. இதன்காரணமாக அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பகுதியில் உள்ள சோலையம்மா நகர், காந்திநகர், அம்பேத்கர் நகர், வி.பி.சிங் நகர், பெருமாள் அடிபாதம், வரபிரசாத் ராவ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சாலையை கடப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் மேல்நிலைப்பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் சாலையை கடப்பதற்கு காலை, மாலை நேரங்களில் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். கொஞ்சம் கவனக்குறைவாக செயல்பட்டால்கூட விபத்து நடக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும். சிக்னல் அமைக்க செங்குன்றம் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். திருவள்ளூர் நெடுஞ்சாலை பம்மதுகுளம் – சோலையம்மன் நகர் சந்திப்பில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.