புதுடில்லி, ‘பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பில் பரிசோதனை மேற்கொள்வது குற்றமாக பார்க்கப்படும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பில், இரண்டு விரல் பரிசோதனை நடத்தப்படும். அந்தப் பெண் ஏற்கனவே உடலுறவில் ஈடுபட்டுள்ளவரா என்பதை உறுதி செய்ய இந்தப் பரிசோதனை செய்யப்படும்.
இந்நிலையில், பாலியல் பலாத்காரம் தொடர்பான ஒரு வழக்கில், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, இந்த இரட்டை விரல் பரிசோதனை, அவருடைய வேதனையை மேலும் அதிகரிக்கும்.
தான் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் கூறுவதை சந்தேகிக்கும் வகையில் இந்தப் பரிசோதனை உள்ளது.
இது, ஏற்கனவே உடலுறவில் ஈடுபட்டிருந்தாலும், பலாத்காரம் செய்யப்பட்டதாக ஒரு பெண் கூறுவதை ஏற்க மறுப்பதாக அமைந்துள்ளது.
இந்த முறையை மாற்றும் வகையில், 2013ல் ஏற்கனவே சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் முந்தைய பாலியல் உறவுகள், பலாத்கார வழக்கின் விசாரணைக்கு தடையாக இருக்க முடியாது.
எனவே, இரண்டு விரல் பரிசோதனை நடத்தக் கூடாது. இந்த நடைமுறை இன்றளவும் நடைமுறையில் இருப்பது துரதிருஷ்டவசமானது.
அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்படாத இந்த பரிசோதனை செய்வது குற்றமாக பார்க்கப்படும். இது தொடர்பாக அனைத்து மாநில போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.
மேலும், மருத்துவக் கல்வியிலும் இது தொடர்பான பாடங்களை நீக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement