“தேர்தல் நேரத்தில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் மூலம் கடவுள் மக்களுக்கு சேதி அனுப்பியிருக்கிறார். இந்த பாலம் இடிந்து விழுந்ததை போல், மேற்குவங்கமும் நாளை இடிந்து விழும். அதிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள் என்று பாலம் விபத்தின் மூலம் கடவுள் சேதி அனுப்பியிருக்கிறார்.” இது 2016ஆம் ஆண்டு மேற்குவங்க தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி பேசியது.
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தன. அப்போது, கொல்கத்தாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த விவேகானந்தா சாலை மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தின்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை குறிவைத்து பிரதமர் மோடி மேற்கண்டவாறு தாக்கி பேசி இருந்தார். மேலும், “கொல்கத்தா பாலம் விபத்து மோசடியின் விளைவு. தேர்தல் நேரத்தில் இதுபோன்று நடந்தது நிச்சயமாக கடவுளின் செயல்தான். நீங்கள் எப்படிப்பட்ட ஆட்சியை நடத்துகிறீர்கள் என்று மக்கள் தெரிந்து கொள்ளுவதற்காக நடந்த நிகழ்வு.” என்றும் பிரதமர் மோடி பாலம் நடந்த விபத்தில் அரசியல் சாயம் பூசி பேசியிருந்தார்.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் சிக்கி 135 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குஜராத்திலும் பாஜக ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இந்த பின்னணியில், பிரதமர் மோடியின் கொல்கத்தா பாலம் விபத்து தொடர்பான பேச்சை சமூக வலைதளங்களில் பகிரும் பலரும், ‘தேர்தல் நேரத்தில் நடந்த இந்த விபத்து குஜராத்தை பாஜகவிடம் இருந்து காப்பதற்காக கடவுளின் செயலால் நடந்த நிகழ்வா?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மோர்பி தொங்கு பாலத்தில் ஏற்பட்ட விபத்து, மிகப்பெரிய ஊழலின் விளைவால் ஏற்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சாடியுள்ளார். மோர்பி பாலம் விபத்து, ‘கடவுளின் செயலா? அல்லது மோசடி செயலா?’ என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் விமர்சித்துள்ளார்.
ஒரு விபத்து நடக்கிறது. அதில் அப்பாவி உயிர்கள் பலியாகின்றன. நாட்டின் பிரதமர் என்ற முறையில் வருத்தம் தெரிவிக்கலாம். இழப்பீடு அறிவிக்கலாம். அதனைவிடுத்து, மக்களின் மரணங்களையும் பிரதமர் மோடி அப்போது அரசியலாக்கியதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குஜராத் பாலம் விபத்து தொடர்பாக ராகுல் காந்தி இப்படி சொல்கிறார். ‘மோர்பி பாலம் விபத்தினால் ஏற்பட்டிருக்கும் சோகத்தை அரசியலாக்க விரும்பவில்லை. அது இறந்தவர்களுக்கு அவமரியாதையாக இருக்கும்.’
ராகுலின் இந்த கருத்தை சுட்டிக்காட்டி, குஜராத்திலும் தேர்தல் நடக்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சி வலுவிழந்து காணப்படுகிறது. தேசியக் கட்சியான காங்கிரஸ் நினைத்தால் இதனை மிகப்பெரிய அளவில் அரசியலாக்கியிருக்கலாம். ஆனால், அப்படி செய்யாமல், இந்த விபத்தை அரசியல் ஆக்குவது இறந்தவர்களுக்கு அவமரியாதையாக இருக்கும் என்கிறார் ராகுல் காந்தி. பப்பு என்று பாஜகவினரால் விமர்சிக்கப்படும் ராகுலிடம் இருந்து முதிர்ச்சியான அரசியல் பாடத்தை பிரதமர் மோடி கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.