மத்தியப் பிரதேச மாநிலம் சாந்திநாத் திகம்பர் பகுதியில் ஜெயின் கோவிலில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் இருந்து வெள்ளி மற்றும் தங்க நகைகளைத் திருடன் ஒருவன் திருடி சென்றுயுள்ளான். அவன் திருடிய 4 நாட்களிலேயே அதனைத் திரும்ப கோவிலுக்கு அருகில் வைத்து விட்டுச் சென்றுள்ளான். மேலும் அதனுடன் ஒரு கடிதத்தையும் வைத்துச் சென்றுள்ளான்.
அதில், அவன் திருடிய நகைகளினால் பெரும் அவதி அடைந்தாக தெரிவித்துள்ளான். மேலும் மன்னிப்பு கேட்டுள்ளான். தற்போது இந்த நகை திருட்டு வழக்கை லாம்டா காவல் நிலையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கோவிலில் இருந்து அலங்கார வெள்ளி ஆபரணங்கள், சிலை மேல் வைக்கும் குடை மேலும் சில தங்க ஆபரணங்களைத் திருடியுள்ளான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 24-ம் தேதி நகைகள் திருட்டுப் போன நிலையில் 28-ம் தேதி அவைகளை மீண்டும் கோவிலுக்குத் திரும்பியுள்ளது.
ஜெயின் குடும்பத்தினர், பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ஒரு பை இருப்பதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் பையைக் கைப்பற்றிப் பார்த்ததில் அதில் திருட்டுப் போன கோவில் நகை இருந்துள்ளது.
மேலும் அதனுடன் இருந்த மன்னிப்பு கடிதத்தில், ‘நான் என்னுடைய செயலுக்காக மன்னிப்பு எதிர்பார்க்கிறேன். நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னியுங்கள். நகைகளைத் திருடிய பின்பு நான் பெரும் சிரமத்திற்கு உள்ளானேன்’ என்று எழுதப்பட்டு இருந்தது. கடிதம் மற்றும் நகைகளைக் கையகப்படுத்திய போலீசார் திருடனைத் தேடும் பணியில் தீவிரம் அடைந்துள்ளனர்.