மோர்பி தொங்கு பாலம் விபத்து: பிரதமர் மோடி நேரில் ஆறுதல்!

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த தீபாவளியன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. சுற்றுலாத் தலமான மோர்பி நகர் தொங்கு பாலத்தில் நேற்று முன் தினம் பொதுமக்கள் திரண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பாலம் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி 135 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பலர் குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் மோர்பி தொங்கு பாலம் விபத்து நடைபெற்ற பகுதியில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர், மருத்துவமனைக்கு நேரில் சென்ற பிரதமர் மோடி, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன், குஜராத் முதல்வர், அம்மாநில உள்துறை அமைச்சர் ஆகியோரும் உடனிருந்தனர்.

முன்னதாக, பாலம் விபத்தின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களை பிரதமர் மோடி சந்தித்து பாராட்டியதுடன், அவர்களிடம் விபத்து தொடர்பாக கேட்டறிந்தார். அத்துடன், பாலம் விபத்து தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் விபத்து மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலம் விபத்து தொடர்பாக குஜராத் மாநில அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.