ரூ.50 ஆயிரம் சில்லரை காசுகள் தந்து பைக் வாங்கிய நபர்| Dinamalar

கரிம்கஞ்ச் :அசாமில், இருசக்கர வாகனம் வாங்க வந்த நபர், 50 ஆயிரம் ரூபாய் பணத்தை சில்லரை காசுகளாக கொடுத்த சம்பவம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

வடகிழக்கு மாநிலமான அசாமின் கரிம்கஞ்ச் மாவட்டம், ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் சுரஞ்சன் ராய். சிறு வியாபாரியான இவருக்கு, டி.வி.எஸ்., நிறுவன தயாரிப்பான, ‘அப்பாச்சி’ இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என்பது பல ஆண்டு கனவாக இருந்தது.

இதற்காக சிறுக சிறுக பணம் சேர்த்து வந்தார். 50 ஆயிரம் ரூபாய் வரை சேர்ந்ததும், அதை முன்பணமாக செலுத்தி இருசக்கர வாகனத்தை வாங்க அக்., 29ல் கடைக்கு சென்றார்.

கடை ஊழியர்கள், ‘அப்பாச்சி 160 4வி’ இருசக்கர வாகனத்தை காண்பித்தனர். வாகனத்தை தேர்வு செய்த பின், 50 ஆயிரம் ரூபாய் முன்பணமாக செலுத்துவதாக சுரஞ்சன் தெரிவித்தார்.

வெளியில் சென்று பெரிய சாக்கு பையை துாக்கி வந்தார். கடை ஊழியர்கள் குழப்பம் அடைந்தனர். மூட்டையை திறந்து அதில் இருந்த சில்லரை காசுகளை கொட்டினார். இருசக்கர வாகனம் வாங்க பல ஆண்டுகளாக பணம் சேமித்ததாக சொன்னார். கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு அவரது அனுமதிக்கு பின், இருசக்கர வாகனத்தை சுரஞ்சனிடம் ஊழியர்கள் அளித்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.