ரூ.50 கோடி மேட்டர், ராஜ்ய சபா சீட், சிபிஐ… AAP-ஐ கதறவிட்ட சுகேஷ் சந்திரசேகர்!

சுகேஷ் சந்திரசேகர். இவரது பெயரை கேட்டாலே, அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை மீட்டெடுக்க டிடிவி தினகரன் தரப்பில் டீலிங் பேசப்பட்ட புரோக்கர், பொருளாதார குற்றப்பிரிவு மோசடிகளில் சிக்கியவர், தொழிலதிபர்களிடம் பல லட்சங்கள் மோசடி செய்தவர், கேரளா மற்றும் பாலிவுட் நடிகைகளுடன் நெருக்கம், திகார் சிறையில் இருந்தபடியே பெரும்புள்ளிகளுடன் பேச்சுவார்த்தை உள்ளிட்ட விஷயங்கள் தான் உடனடியாக நினைவில் தோன்றும். இவரை பற்றி பரபரப்பான விஷயம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, கடந்த மாதம் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவிற்கு திகார் சிறையில் இருந்தவாறே தனது வழக்கறிஞர் மூலம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது தனியார் செய்தி தொலைக்காட்சி மூலம் வெளியே வந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில், 2015ஆம் ஆண்டில் இருந்து எனக்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சத்யேந்தர் ஜெயினை தெரியும். அவர் எனக்கு தென்னிந்திய அளவில் கட்சியில் பெரிய பதவியை பெற்று தருவதாக கூறினார்.

இதை நம்பி 50 கோடி ரூபாய் வரை கட்சிக்கு அளித்துள்ளேன். எனக்கு ராஜ்ய சபா சீட் தருவதாகவும் தெரிவித்தார். நான் இரட்டை இலை வழக்கு தொடர்பாக 2017 முதல் டெல்லியில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். நான் சிறையில் இருக்கும் போது பல முறை சத்யேந்தர் ஜெயின் என்னை சந்தித்துள்ளார். அப்போதெல்லாம் ஆம் ஆத்மி கட்சிக்கு நான் அளித்த பங்களிப்பு குறித்து வெளியே ஏதேனும் சொல்லிவிட்டேனா? என்ற கேள்வி எழுப்பினர்.

2019ஆம் ஆண்டு சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது செயலாளர் சுஷில் ஆகியோர் என்னை சிறையில் சந்தித்தனர். அப்போது சிறையில் எனக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டுமெனில் ஒவ்வொரு மாதமும் 2 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுதவிர சிறைத்துறை டிஜி சந்தீப் கோயலுக்கு 1.5 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

அதன்பிறகு 3 மாதங்களில் மொத்தம் 10 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். இதையடுத்து கொல்கத்தாவில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. 10 கோடி ரூபாயை சத்யேந்தர் ஜெயினும், 12.5 கோடி ரூபாயை சிறைத்துறை டிஜி-யும் எடுத்து கொண்டனர். இந்த விவரங்கள் அனைத்தையும் அமலாக்கத்துறை விசாரணையில் தெரிவித்துள்ளேன்.

மேலும் சிபிஐ விசாரணை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தேன். இந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் எனக்கு அச்சுறுத்தல் விடுக்க தொடங்கியுள்ளனர். நீதிமன்றத்தில் இருந்து வழக்கை வாபஸ் பெற வற்புறுத்தி வருகின்றனர்.

என்னை கடுமையாக துன்புறுத்துகின்றனர். எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதற்காக அனைத்து ஆதாரங்களையும் தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளார். இது ஆம் ஆத்மிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.