தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையை ஒட்டிய பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் தமிழக பகுதிகளில் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு நிலைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி ஆரம்பித்து ,மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று (31) முதல் கனமழை பெய்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை இன்று பெய்யக்கூடும். மேலும் டெல்டா மாவட்டங்கள் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால் உள்பட 17 மாவட்டங்களில் இன்றும் (01) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரியில் வரும் 5ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும். அதிகபட்சமாக செங்குன்றத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை பெரம்பூரில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கடந்த 72 ஆண்டுகளில் சென்னை நுங்கம்பாக்கத்தில் கனமழை (8 செ.மீ.) 3-வது முறையாக பதிவாகி உள்ளது. 30 ஆண்டுகளில் முதல்முறையாக அதிகபட்சமாக இன்று மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் மேலும் தெரிவித்தார்.