வாடகை முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க நடவடிக்கை
தொழில் ரீதியாக ஈடுபடும் வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கும் முதல் கட்ட நடவடிக்கை இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி மேல் மாகாணத்தில் தொழில் ரீதியாக ஈடுபடும் முச்சக்கரவண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த பதிவு நடவடிக்கைகளின் பின்னர், மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கும் வாரத்திற்கு 5 லீற்றர் என்ற எரிபொருள் கோட்டா எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 10 லீற்றராக அதிகரிக்கப்படவுள்ளது.
நாட்டின் ஏனைய மாகாணங்களில் பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளின் பதிவு இம்மாதம் 6ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அதன் பின்னர் அந்த முச்சக்கரவண்டிகளுக்கும் புதிய எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையில் சுமார் 10 இலட்சத்து 80,000 முச்சக்கரவண்டிகள் இருப்பதாகவும் அதில் 4 இலட்சம் தொழில் ரீதியாக ஈடுபடும் பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகள்.
இதேவேளை, மேல்மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளை பதிவு செய்யும் முறை குறித்து மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முச்சக்கரவண்டி பணியகத்தின் தலைவர் ஜீவிந்த கீர்த்திரத்ன விளக்கமளித்தார்.