ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் தாலுகா, டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியம், கொங்கர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட விளாங்கோம்பை மலைக்கிராமத்தில் ஊராளி பழங்குடியினத்தைச் சேர்ந்த 45 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல தலைமுறைகளாக கல்வி வாசனையே அறியாத இந்த மலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்வி பயில்வதற்காக விளாங்கோம்பையில் கடந்த 2014-ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளி தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் 30 மாணவர்கள் பயின்று வந்தனர்.
இந்தப் பள்ளியையும் கடந்த ஆண்டு மத்திய அரசு மூடிவிட்டது. அதனால் இந்த மாணவர்களின் கல்வி தடைபட்டது. கல்வி பாதிக்கப்பட்ட பழங்குடி மாணவர்கள் குண்டேரிப்பள்ளம் அருகே வினோபா நகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 20 பேரும், கொங்கர்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 பேரும் சேர்க்கப்பட்டனர். இந்த மாணவர்கள் தினமும் பள்ளி சென்று வருவதற்காக ஒரு சரக்கு வாகனத்தை கிராம மக்கள் ஏற்பாடு செய்தனர்.
தற்போது வினோபா நகர் வரை மட்டுமே போக்குவரத்து வசதி உள்ளது. விளாங்கோம்பையிலிருந்து வினோபா நகர் பள்ளிக்குச் செல்ல வேண்டுமானால் 8 கி.மீ தூரம் அடர்ந்த வனப்பகுதியின் வழியாக 4 காட்டாறுகளைக் கடந்துதான் இந்தக் குழந்தைகள் தினந்தோறும் பள்ளிக்குச் சென்று வந்தனர். இந்த பாதையும் கரடுமுரடாக, குழிகளும், கல்லும் நிறைந்து காணப்படுவதால் மாணவர்களும், அந்தப் பகுதி மக்களும் சென்று வர சிரமப்படுகின்றனர். அண்மையில் பெய்த கனமழையால் இந்த 4 காட்டாறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விளாங்கோம்பை பழங்குடி மாணவர்களால் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பள்ளிக்குச் செல்ல முடியவில்லை.
இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் டி.என்.பாளையம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பழங்குடி மாணவர்கள், விளாங்கோம்பையிலேயே பள்ளியை மீண்டும் திறக்க வலியுறுத்தியும், வாகனப் போக்குவரத்துக்கு ஏதுவாக சாலையைச் சீரமைத்துத் தரக் கோரியும் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.பி.குணசேகரன், “விளாங்கோம்பையில் கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழையால் 4 காட்டாறுகளிலும் வெள்ளம் ஓடுவதால் 15 நாள்களுக்கும் மேலாக இந்த பழங்குடி மாணவர்களால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. தற்போது வெள்ள நீர் வடிந்தாலும் காட்டாறுகளில் ஏராளமான மணல் தேங்கி நிற்பதால் அந்த பாதையை வாகனங்களால் கடந்து செல்ல முடிவதில்லை. இதன் காரணமாக மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் பழங்குடி மக்கள் தவிக்கின்றனர். இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு, ஏற்கெனவே இங்கு செயல்பட்டு வந்த மத்திய அரசின் தேசிய குழந்தைத் தொழிலாளர் பள்ளியை மீண்டும் திறப்பதுதான். குறைந்தபட்சம் கல்வித் துறை மூலம் 2 ஆசிரியர்களையேனும் நியமிக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள பள்ளிக் கட்டடமும், வனத்துறையின் ஒரு கட்டடமும் உள்ளதால் பள்ளியை செயல்படுத்த இதுவே போதுமானதாக இருக்கும். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் உண்டு உறைவிடப்பள்ளி அமைத்துத் தருவதாகக் கூறுகின்றனர். இந்தப் பள்ளியை வருவாய்த்துறை அதிகாரிகள்தான் பராமரிப்பார்கள். எனவே கல்வித் துறை கட்டுப்பாட்டில் இங்கு பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.