பிரிஸ்பேன்,
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் இன்று (செவ்வாய்கிழமை) ஒரே நாளில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. பிரிஸ்பேனில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் குரூப்1-ல் அங்கம் வகிக்கும் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் அயர்லாந்திடம் அடி பணிந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முந்தைய ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற உச்சக்கட்ட நெருக்கடியுடன் இங்கிலாந்து களம் காணுகிறது.
நியூசிலாந்து அணி தனது முதலாவது ஆட்டத்தில் 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை பந்தாடியது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஆட்டம் மழையால் ரத்தானது. கடந்த ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை பதம் பார்த்தது. 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றியை வசப்படுத்தினால், அந்த அணியின் அரைஇறுதி வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகி விடும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 13-ல் இங்கிலாந்தும், 8-ல் நியூசிலாந்தும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), அலெக்ஸ் ஹாலெஸ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், மொயீன் அலி, லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், மார்க் அவுட், அடில் ரஷித்.
நியூசிலாந்து: பின் ஆலென், டிவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர் அல்லது பிரேஸ்வெல், சோதி, டிம் சவுதி, லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.
இலங்கை- ஆப்கானிஸ்தான்
முன்னதாக இதே மைதானத்தில் காலை 9.30 மணிக்கு நடக்கம் ஆட்டத்தில் முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, தசுன் ஷனகா தலைமையிலான முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் (குரூப்1) மல்லுகட்டுகிறது. இந்த ஆட்டத்தில் தோற்கும் அணியின் அரைஇறுதி வாய்ப்பு அம்பேல் ஆகிவிடும் என்பதால் இரு அணிகளும் வரிந்து கட்டி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 2 ஆட்டத்தில் இலங்கையும், ஒரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன.
இதற்கிடையே, வயிற்றுபகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியில் ஹஸ்ரத்துல்லா ஜஜாய் எஞ்சிய தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக குல்படின் நைப் சேர்க்கப்பட்டுள்ளார்.
மழை மிரட்டல்
இன்றைய ஆட்டங்களின் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்னொரு பக்கம் மழையும் மிரட்டிக்கொண்டிருக்கிறது. பிரிஸ்பேனில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.