“அன்று குலாம் நபி ஆசாத்… இன்று கெலாட்…” – மோடியின் புகழாரத்தை முன்வைத்து சச்சின் பைலட் விமர்சனம்

ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): கடந்த காலத்தில் குலாம் நபி ஆசாத்தை புகழ்ந்ததைப் போலவே தற்போது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டையும் பிரதமர் மோடி புகழ்ந்திருப்பதாக ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள மங்கர்தாமில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்றார். இதில், மாநில முதல்வர் அசோக் கெலாட்டும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய கெலாட், பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைப்பதை சுட்டிக்காட்டினார். ஜனநாயகம் வேரூன்றி இருக்கும் மகாத்மா காந்தியின் நாட்டின் பிரதமர் என்பதால்தான் அவருக்கு இத்தனை சிறப்பான வரவேற்பு இருக்கிறது என குறிப்பிட்டார்.

இதையடுத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தான் குஜராத் முதல்வராக இருக்கும்போது ராஜஸ்தான் முதல்வராக கெலாட் இருந்ததையும், இருவரும் இணைந்து பணியாற்றியதையும் நினைவுகூர்ந்தார். நமது நாட்டின் மூத்த முதல்வர்களில் அசோக் கெலாட்டும் ஒருவர் என பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட்டின் அரசியல் போட்டியாளராகக் கருதப்படும் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், மாநிலங்களவையில் இருந்து விடைபெறும் நாளில் அவரை எவ்வாறு பிரதமர் மோடி புகழ்ந்து பேசினாரோ அதைப் போலவே தற்போது அசோக் கெலாட்டை புகழ்ந்து பேசியுள்ளார். குலாம் நபி ஆசாத்தை பிரதமர் மோடி புகழ்ந்து பேசியதை அடுத்து என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் (அதாவது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துவிட்டு பிறகு தனிக் கட்சி தொடங்கியதை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்) என தெரிவித்த சச்சின் பைலட், நேற்று பிரதமர் மோடி, அசோக் கெலாட்டை புகழ்ந்ததை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிட இருந்த நிலையில், ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க வேண்டும் என்ற கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என ராகுல் காந்தி கூறியதை அடுத்து, கெலாட் முதல்வராகவும் தொடர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் என்றும் கூறி அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 3 பேர், தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பினர். இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள், இது ஒழுங்கீனமான செயல் என கண்டித்தனர்.

இதனை இன்று சுட்டிக்காட்டிய சச்சின் பைலட், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் 3 பேர் மீதும் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நடவடிக்கை எடுப்பதற்கு இதுவே சரியான நேரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சச்சின் பைலட்டின் இந்தப் பேச்சு ராஜஸ்தான் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.