செய்யூர்: அரியனூர் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து மதுராந்தகம், செய்யூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் மூலம் இப்பகுதி கிராம மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த பேருந்து நிறுத்தத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.
முறையாக பராமரிக்காததால் நாளடைவில் நிழற்குடை சிதிலமடைந்து இடிந்துவிழுந்துவிட்டது. இதனால் பேருந்தில் பயணம் செய்யவரும் கிராம மக்கள், வெயிலிலும், மழையிலும் சிரமப்பட்டு வருகின்றனர். மழை வரும்போது ஒதுங்கக்கூட இடமின்றி தவிக்கின்றனர். இதனால் பயணியர் நிழற்குடை அமைத்து தரவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பயணிகள் நலனை கருத்தில் கொண்டு அரியனூர் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைத்துதர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.